SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தார்.

அத்துடன், இதன்போது அவர் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிள்ளையான் சிறையிலிருந்து வருகை தந்து ஆணைக்குழுவுக்கு செல்கின்றார். பின்னர் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார். அதனைத் தொடர்ந்து காரியாலத்துக்கு செல்கின்றார். அங்கு மக்களை வருமாறு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுகின்றார்.

இவ்வாறு சிறையிலுள்ள கைதிகளுக்கு செய்ய முடியுமா? ஏனைய குற்றங்கள் புரிந்த சிலரை அவர்களது பெற்றோரினால் கூட காண முடியாது. காரணம் கொரோனா அச்சுறுத்தலாகும்.

ஆனால், பிள்ளையான் மட்டக்களப்பு வருகின்றார், ஆலய வழிப்பாட்டுக்கு செல்கின்றார். நிகழ்வுகளில் பங்கேற்றுகின்றார். இதனை எவ்வாறு செய்ய முடியும். இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.

83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச் சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கு முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை.

ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி நிச்சயம் தோல்வியடைவார்.

மட்டக்களப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, அவரை சந்தித்து இதுபற்றி கூறினேன். மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தினேன்.

ஆனால் புதிதாக 32 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு அனுமதிக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு ஒரு அனுமதிக்கு 2 இலட்சம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு வருடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 22 கிலோ மீற்றர் உள்ள ஆற்றில் விரும்பிய எந்த பகுதியிலும் மணல் அகழ்வில் ஈடுபட முடியும்.

மணல் அகழ்வில் ஈடுபடுவது பிரச்சினை இல்லை. குறித்த பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உரித்தான பகுதி. இங்கு ஒருவருக்கு 2 இலட்சத்தை கொடுத்து அவரிடம் மண்ணினை பெறுவதற்கு என்ன அவசியம் இருக்கின்றது.

அதாவது வருடம் ஒன்றுக்கு 10 இலட்சத்தை பெறுவதற்காகவா இவர்கள் நாடாளுமன்றம் வருகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.

அத்துடன், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு சிலரிடம் ஒரு இலட்சம் வரை பணத்தினைப் பெற்றுக் கொண்டே வேலையினை வழங்கியுள்ளனர்.

யார் இதனை கூறியுள்ளது என பார்த்தால் பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மானே இதனைக் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை நன்றாக தேடிப்பாருங்கள். இத்தகையவர்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email