SHARE

இலங்கை அரசு எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள காணிகளை ஏக்கர் ஏக்கராக வெளிநாடுகளிற்கு விற்பதை தவிர வேறு வழிகள் இல்லையென தெரிவித்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இலங்கை அரசின் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் இலங்கை மக்களிற்கு ஏதுமில்லை.

இலங்கை மக்களிற்கு ஏதுமில்லையெனும் போது தமிழ் மக்களிற்கு ஏதும் இருக்காதென்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஏற்கனவே பெறப்பட்டுள்ள கடன்களிற்கு என்ன செய்வது என்பது பற்றியோ அல்லது புதிதாக எவ்வாறு கடன் பெறப்போகின்றோம் என்பது தொடர்பாகவோ ஏதுமில்லை.

இந்தியாவினையோ அல்லது ஜரோப்பிய சமூகத்தையோ திருப்திப்படுத்துவதாக இலங்கையின் வெளிவிவகார கொள்கை இல்லை. ஆனாலும் தனது கேந்திர முக்கியத்துவம் மிக்க நலன்கருதி சீனா சிலவேளை தற்போதைய அரசிற்கு கடன் வழங்கலாம்.

ஆனால் ஏற்கனவே பட்ட கடனிற்கு 99 வருடத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை தாரை வார்த்தாயிற்று. இப்போது போர்ட்சிற்றியிலும் அரை வாசியினை சீனாவிற்கு கொடுத்தாயிற்று.

இனிமேல் வருமானத்தை பெற எஞ்சிய காணிகளை ஏக்கர் ஏக்கராக வெளிநாடுகளிற்கு விற்பது தான் இந்த அரசிற்கு எஞ்சியிருக்கின்றதெனவும் அவர் தெரிவித்தார். 

Print Friendly, PDF & Email