– வேதநாயகம் தபேந்திரன்
1995 ஒக்ரோபர் 30 ……
இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் யாழ்ப்பாண மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத துன்பியல் நாள்களில் ஒன்று. இவ் வருடத்துடன் 25 ஆண்டுகள் கடந்து விடப் போகிறது.
யாழ்ப்பாண மாவட்டம் முழுவதையும் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்து மீட்பதற்காக 1995 செப்ரெம்பர் மாதம் சூரியக்கதிர் எனும் பெயரிலான இராணுவ நடவடிக்கை அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டது.
முன்னேறிய படைகள் மீது விடுதலைப் புலிகளும் மிக மூர்க்கத்தனமாகத் தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிர்த்துப் போராடினார்கள்.
பலாலி படை முகாமிலிருந்து முன்னேறிய படைகள் கோப்பாயை நெருங்கும் நிலையில் விடுதலைப் புலிகள் வலிகாமம், பெரிய யாழ்ப்பாணம் ( யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகள் ) மக்கள் முழுப் பேரையும் உடனடியாக நாவற்குழிப் பாலம் ஊடாக தென்மராட்சிக்கு இடம் பெயருமாறு அறிவித்தார்கள்.
1995 ஒக்ரோபர் மாலை 4 மணி பதட்டமான ஒரு சூழலில் விடுதலைப் புலிகளால் ஸ்பீக்கர் அறிவிப்பு வந்திருந்தது. போரியல் வாழ்க்கைக்குள் பழக்கப்பட்ட மக்கள் திடீர் இடம்பெயர்வுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தார்கள்.
வீதிக்கு நூற்றுக்கணக்காக வந்தார்கள். நூறுகள், ஆயிரங்களாக, ஆயிரங்கள் இலட்சங்களாகியது. ஒரே நேரத்தில் 5 இலட்சம் மக்கள் வீதிகளில் நின்றார்கள்.
தனது வீட்டில் எதை எடுப்பது ,எதைக் கைவிடுவது என விடை காண முடியாத நிலையில் நகைநட்டு, காணி உறுதிகள், அத்தியாவசிய உடுபிடவைகள், முக்கியமான சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.
ஆசைகளை ஒறுத்துச் சிறுகச் சிறுகச் சேமித்து கட்டிய வீட்டை, கிணற்றை, தளபாடங்களை எல்லாவற்றையும் பிரிய மனமின்றிப் பிரிந்தார்கள்.
வாஞ்சையுடன் வளர்த்த ஆடு,மாடுகளை, கோழிகளை , பிறந்து வளர்ந்த மண்ணை, வளர்த்த மா மரத்தை, பயிரிட்டுப் பண்படுத்திய தோட்டங்களை, பிள்ளைகள் போலப் பராமரித்த தென்னம்பிள்ளைகளை, பூங்கன்றுகளை எப்படிப் பிரிவது.
யாழ் கண்டி வீதியில் மக்கள் வெள்ளம் பல இடங்களிலிருந்தும் வந்து திரண்டது. பத்தடி தூரத்திற்கு நடக்கப் பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. மாரிகால மழைத் தூறல்களில், இடையிடையே சாதாரண மழையில் நனைந்தபடியே மக்கள் வெள்ளம் வீதியில் மிக மெல்ல மெல்ல முன்னேறியது.
பயம், பசி,பிறந்த தாயக மண்ணை விடுத்து ஓடுகின்றோம். தீவகம், பலாலி, காங்கேசன்துறை மக்களின் இடம்பெயர்வு போல எமது இடம் பெயர்வும் நீண்ட காலத்திற்குச் செல்லப் போகின்றதா?
எங்கே போகப் போகிறோம் ? எங்கே தங்க இடம் கிடைக்கும் ? சீவிப்பதற்கு என்ன வழி ? பிள்ளைகளின் படிப்புக்கு என்ன வழி ?எப்போது எனது தாய் மண்ணைத் திரும்பக் காணுவேன். இப்படியே அடுக்கடுக்காகக் கேள்விகள்.
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் நோயாளியாக விட்டு விட்ட வந்த அப்பா என்ன செய்வாரோ ? அம்மாவை யார் பார்ப்பார்கள் ? வயது முதிர்ந்த அம்மம்மாவை யார் பார்ப்பார்கள்?
இப்படிச் சிலரது மனதில் கேள்விகள்.. கார்,பஸ்,ஆட்டோ,மோட்டார் சைக்கிள்கள் பெருமளவில் புழங்காத அந்தக் காலத்தில் சைக்கிள் தான் பெருமளவானோரின் கைகொடுக்கும் தெய்வம்.
சைக்கிளின் முன் பாரில் மனைவி அல்லது பிள்ளை, பின் கரியரில் பெருஞ்சுமையாகப் பொருள்கள். நள்ளிரவு தாண்டியும் தமது வாழ்வின் துயரத்தைச் சாபமாக நினைத்தபடியே நடந்தார்கள். இல்லையில்லை அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள்.
சைக்கிளிள் பின் கரியரில் நான்கு புறமும் தடிகள் கட்டி நடுவில் தள்ளாடும் வயதிலுள்ள தனது தாய் அல்லது தந்தையரை இருத்தி மகன் சைக்கிளை உருட்டிச் சென்ற காட்சி பார்ப்பவர் மனங்களில் கண்ணீரை வரவழைத்தது.
”தம்மை இந்த இடத்தில் கைவிட்டுச் செல்லுங்கள். தாம் தமது விதியைத் தேடுகின்றோம். உனது மனைவி பிள்ளைகளைப் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள். ” எனத் தாய் தந்தையர் கேட்ட போது இல்லை அம்மா, இல்லை அப்பா உங்களையும் அவர்களுடன் சேர்த்து அழைத்துச் செல்வேன் என மகன் காட்டிய உறுதி கல் மனங்களையும் கரைய வைத்தது.
கர்பிணிப் பெண்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் அந்த நடுச் சாமப் பொழுதில் வீதியில் பட்ட அவஸ்தைகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் கூட எடுக்க வழியின்றி மழைத்துளிகளைக் குடையினுள் ஏந்தியபடி தாகத்தைத் தீர்த்த இயலாமையை யாரிடம் சொல்ல ?
நித்திரை விழிப்பு, பசி என்பவற்றால் அவதிப்பட்டு அழுத பிள்ளைகளை ஆறுதல் படுத்த வழியின்றித் தாய் தந்தையர் பட்ட அவதிகள் திரும்பும் திசை யாவும் இருந்தது. தமது உயிருக்கு நிகராக நேசித்த நாய்,பூனைகளைக் கூடச் சிலர் அழைத்து வந்திருந்தார்கள்.
நாய்கள் வழமையான குரைப்பு,கடிப்பு இன்றி நிலைமையைப் புரிந்து சாதுவாகித் தம்மை ஆறறிவு ஜீவன்களாக நிரூபித்துக் கொண்டன. ஒரே குடும்பத்தில் ஒன்றாக வந்திருந்தவர்கள் சிலர் ஆங்காங்கே மாறுபட்டுத் தேடிக் குரல் கொடுத்தார்கள்.
அந்தப் பெரிய மகா சமுத்திரத்தில் ஓடியாடித் தேட முடியாத நிலைமை. தவறவிட்ட தமது உறவுகளை நினைத்து குரல் கொடுத்துக் கொடுத்துக் களைத்த துன்பத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
தமது குடும்ப உறுப்பினர்களும் அது போலத் தவற விடப்படக் கூடாது என்பதற்காக மாறி மாறிப் பெயர் சொன்னபடியே இடம் பெயர்ந்தோரும் இருந்தார்கள்.
ஸ்ரார்ட் செய்தபடியே நகர்ந்த ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் சில எரிபொருள் தீர்ந்த நிலையில் ” மண்ணெண்ணைக்கு எங்கே போவேனென அந்தரப்பட்ட துன்பங்களும் நிகழ்ந்தது.
காற்றுப் போன சைக்கிள், ஆனால் முன்புற பாரில் ஒருவர் ,பின்புறம் கரியரில் சுமை கூடிய பொருள்கள். உருட்ட முடியாமல் நெஞ்சு நோக, நோகப் பட்ட அவதிகள் . தமது சின்னச் சைக்கிளைத் தாமே ஓடி வருவோமென வீட்டிலிருந்து எடுத்து வந்த சிறார்கள் மணித்தியாலங்கள் பல கரைய நித்திரைத் தாகம், பசி ,களைப்புக் காரணமாகத் துவண்ட போது பெற்றோர் என்ன செய்வதெனத் துடித்த துடிப்புகள் கண்களைக் கலங்க வைத்தது.
நாவற்குழிப் பாலத்தை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பெடியள் உடைக்கப் போகின்றார்களாம். அதற்குள் தென்மராட்சிக்குள் போய் விட வேண்டுமென்ற அவதியினுள் பட்ட மனத் துன்பங்கள் பல.
வீதி முழுவதும் சனத்திரள் .ஆகவே இதனால் போக முடியாது. கிழக்கு அரியாலை ஊடாகச் சென்று நாவற்குழிப் பரவைக் கடலை கடந்து நடப்போமெனச் சென்ற மக்கள் கூட்டத்தில் எமது குடும்பமும் அடங்கும். மாரி மழைக்சேற்றுக் கடலில் நெஞ்சளவு தண்ணீரில் கடலுக்குள் சைக்களைத் தோளில் தூக்கிச் சென்ற வலி பெரும் வலி தான்.
ஆசையுடன் பல வருடங்கள் நேசித்த தமிழும், எழுத்தும் தந்த எனது றேடியோ உப்புத் தண்ணீரில் முழுதுமாக நனைந்து பழுதாகிப் போனது எனக்கு இந்தப் பிறவிக் கவலைகளில் ஒன்று தான்.
போர் முகத்து வாழ்க்கையில் வரலாற்றில் மறக்க முடியாத துன்ப நாள்களில் ஒன்றைக் கடந்து 25 வருடங்களாகி விட்டது.
வரலாற்றின் ஏடுகளில் எம் வலிகளும் உள்ளன. ஆனால் வலிக்குரிய நிவாரணங்கள் எப்போது கிடைக்குமோ ?