Home Blog Page 280

‘மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி’ – துவாரகேஸ்வரன்

image_pdfPRINT

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் தம்பியும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்களும் , அக் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவும் மகேஸ்வரனை படுகொலை செய்வதற்கு பல தடவைகள் முயற்சித்தார்கள்.

யாழ்.காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தினுள் வைத்து சுட்டுப்படுகொலை செய்வதற்கு 2000ஆம் ஆண்டு முயற்சித்தார்கள். பின்னர் இளவாலை சென் அன்ரனிஸ் தேவாலயத்திற்கு அருகில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் சுடப்பட்டார். அதில் மகேஸ்வரன் உயிர்தப்பி இருந்தார்.

அதன் பின்னர் ஊர்காவற்துறை பகுதிக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி கட்சியினர் தாக்குதலை மேற்கொண்டதில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதாரவாளர்களை காப்பற்ற சென்ற மகேஸ்வரன் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார்.

பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு மார்கழி மாதம் காரைநகர் சிவன் கோவில் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழாவின் போது கோயிலில் வைத்து மகேஸ்வரனை படுகொலை செய்ய முயற்சித்தார்கள். அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார்.

அதன் பின்னரே கொழும்பில் வைத்து சுட்டுபடுகொலை செய்யப்பட்டார்.

மகேஸ்வரனை படுகொலை செய்த வசந்தன் என அழைக்கப்படும் வெலேன்ரைன் என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். பிறகு அமைப்பில் இருந்து விலகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து இயங்கினார்.

மகேஸ்வரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடுகள் காணப்படவில்லை. அக்கால பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி “அல்மீசா” எனும் கப்பல் ஊடாக பொருட்களை ஏற்றி இறக்கும் வியாபாரம் செய்து வந்தார்.

அதன் ஊடாக யாழில் உள்ள பிரபல வார்த்தகர்கள் நால்வருடன் நட்பு கொண்டு அவர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள்.

அந்த வர்த்தக வியாபாரத்திற்கு வியாபர ரீதியாக மகேஸ்வரன் போட்டியாக இருந்தார். ஏற்கனவே தனி ஒரு மனிதனாக அரசியலில் ஈ.பி.டி.பி.யினருக்கு போட்டியாக இருந்தமையால் , வர்த்தக மற்றும் அரசியல் போட்டியாளனை இல்லாதொழிக்கவே மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.

மகேஸ்வரனை படுகொலை செய்த நபருக்கு உதவியாக வந்த அரியாலையை சேர்ந்த நபர் அன்றைய தினம் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருந்தார். அவரது சடலத்தை அறியாலைக்கு கொண்டு வர உதவியது ஈ.பி.டி.பி.யினரே.

அதேபோன்று கொலையாளி சார்பில் சட்டத்தரணியை நியமித்தமை , சட்டத்தரணிக்கான கொடுப்பனவுகளை கொடுத்தமை அனைத்துமே ஈ.பி.டி,பி.யினர்.

எனவே மகேஸ்வரின் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை , படுகொலை செய்தமை , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை ,உதவியமை என அனைத்தையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தான்.

தற்போது எனக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளனர். போலி முகநூல்கள் ஊடாகவும் , பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் ஊடாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றனர். என தெரிவித்தார்

‘புலி இல்லையேல் அரசியல் இல்லை’

image_pdfPRINT

வடக்கு அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பற்றி கதைக்காமல் அரசியல் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கில் தேர்தல் காலத்தில் விடுதலைப்புலிகளின் பாடல்களை பிரச்சார கூட்டங்களில் ஒலிக்கவிடுவது அவர்களை பற்றி பேசுவது . அவர்களின் நினைவு சின்னங்கள் தொடர்பில் பேசுவது என்றே வடக்கு அரசியல்வாதிகளுக்கு  அரசியல் செய்ய தெரியும்.

வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை பெற்று தருகின்றோம். வேலை வாய்ப்புக்களை பெற்று தருகின்றோம். என அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். அது தொடர்பில் பேச மாட்டார்கள். வடக்கு மக்களை அபிவிருத்தி அடையாத மக்களாகவே வைத்திருக்க அவர்கள் முயல்கின்றார்கள்.

இங்குள்ள அரசியல் வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வி கற்கவில்லை. அவர்களுக்கு வடக்கு பற்றி தெரியுமோ தெரியாது. பலர் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள்.

இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டும் என முயற்சிப்பதில்லை.. தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு உழைக்கின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே காலத்தில் வடக்கின் வசந்தம் எனும் பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்கன் டொலர்ஸ் செலவு செய்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்.

ஆனால் இன்று வடக்கில் எந்த விதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு உள்ளது ? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளது ? எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்க வில்லை. என தெரிவித்தார்.

வாள்களுடன் வந்த நால்வர் கல்லுண்டாவெளியில் கைது

image_pdfPRINT

இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகிதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளையடுத்து பொலிஸ் ரோந்து பொலிஸ் காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட பொலிஸ் சுற்றுக் காவலின் போதே நேற்றிரவு வாள்கள் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிலில் வந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்!

image_pdfPRINT

காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும், தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாகவும்  தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்றைய தினம் வடமாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் தமிழர் தொன்மை அழிப்புக்களை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரேரணையை முன் வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் ,

செம்மலை மக்களுக்கு உப உணவுப்பயிர்ச்செய்கைக்காக ஏற்கனவே நீராவியடி ஏற்றத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது இப்பகுதிகளில் மக்கள் தமது சிறுபயிர்ச்செய்கைகள் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இங்கு பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்தது. 2009இற்கு பின் இதற்கு எதிரப்பக்கமாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இது தவிர பிள்ளையாரைச் சூழ சிறியளவிலான விகாரை, புத்தர் சிலை என்பன காணப்பட்டன. தற்போது மிகவும் பெரியளவிலான குருகந்தராஜ மகா விகாரை என்ற விகாரை அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது.

கடந்த 2018.07.03ம் திகதி நில அளவைத்திணைக்களத்துடன் இணைந்து அளவீடு செய்து அபகரிக்கும் பாரியளவிலான எண்ணத்துடனான இவர்களின் முயற்சியை மக்களும் மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து தற்காலிகமாக தடுத்து நிறுத்தினோம்.

போர் முடிவுற்ற காலப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் சட்டத்தின் மூலமான இச்செயல்களுக்கு உறுதுணையாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஜகத் பாலசூரிய அவர்கள் 1823/73ம் இலக்க

2013.08.16 ம்திகதி வெள்ளிக்கிழமை 188ம் அத்தியாயமான தொல்லியல் கட்டளைச்சட்டம் 16ம் பிரிவின் கீழ் புராதனச் சின்னங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் குறிப்பாக

01.முல்லைத்தீவு பிரதான பொதுச்சந்தை (J.P லூயில் மனுவேல் ஒவ் வன்னி, புத்தகத்தில் 1886ல் கட்டப்பட்ட ஒரு நல்ல சந்தைக்கட்டடம் என்று குறிப்பிட்டுள்ளார்)

02.ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்

03.மாந்தைகிழக்கு பூவரங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில்

04.கரைதுறைப்பற்று பிரதேச குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில் வளாகம்

05.கரைதுறைப்பற்று பிரதேச குமுழமுனை கிராம அலுவலர் பிரிவில் ஆஞ்சநேயர் கோவிலை அண்மித்த இடங்கள்

06.மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கரும்புலியன் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிபுலியன் குளம் சிவன் கோவில்

07.மாந்தை கிழக்கு பாலிநகர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில்

08.குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவிலடி உள்ளிட்ட 47 இடங்களையும்,

மன்னாரில்

01.திருக்கேதீஸ்வரக்கோவில் பகுதியில் முன்தூண்கள் உள்ள பகுதி

02.முத்தரிப்புத்துறையின் அரிப்புக்கோட்டைப்பகுதி மற்றும் டொரிக் கட்டடம் உள்ளிட்ட 19 இடங்களையும்,

யாழ்ப்பாணத்தில்

01.உடுவில் பிரதேச செயலக பிரிவில் சுன்னாகம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்த சுன்னாகம் பொதுச்சந்தை

02.மயிலிட்டி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவிலடி

03.வேலணை அல்லைப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் அல்லிராணி கோட்டைப்பகுதி

04.யாழ் பழைய பூங்காவின் புராதனக்குளம்

உள்ளிட்ட 09 இடங்களையும் வவுனியாவில் 07 இடங்களையும் வடமகாணம் முழுவதிலும் மொத்தமாக 82 இடங்களையும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

புராதனச்சின்னங்கள் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவை தான் ஆனால் இங்கு அதாவது இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் தொல்பொருள் திணைக்களம் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் மூலமாக

புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுதல் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் தொன்மைகள் தொன்மைச்சான்றுகள் அழிக்ப்படுகின்றன. ஒரு இனத்தினுடைய

பழைமை வாய்ந்த இச்சான்றுகளை அழித்து பௌத்த ஆதிக்கங்களை தமிழர்களின் தொன்று தொட்டு வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் நுழைக்கின்றார்கள் /திணிக்கின்றார்கள்.  இதன் மூலம் ஒரு கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்கு முறை/இன அழிப்பினை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. இதனை நிரூபிக்கக்கூடிய வகையில்

01.ஒட்டுசுட்டான் ஒதியமலையில் வைரவர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது தற்பேர்து அங்கு சைவசமய நிகழ்வுகள் இராணுவத்தால் மறுக்கப்பட்டு, அந்த மலைப்பகுதியில் பௌத்த  பிக்குகள் அடிக்கடி சென்று வருவதை மக்கள் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

02.ஏற்கனவே குறிப்பிட்ட நீராவியடி ஏற்றத்தின் பிள்ளையார் கோவிலடி சுற்றி வளைக்கப்பட்டு புத்தர் சிலையுடனான விகாரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 03ம்திகதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக கண்டோம்.

03.இதே போல் முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில் அருகாமையில் தொல் பொருள் திணைக்கள அறிவிப்புடன் பௌத்த அடையாளங்கள் இடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

04.குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோயில் வளாகம் இரண்டு தடவை பிக்குகள் பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்

05. கிழக்கில் தென்னமரவடி கந்தசாமிமலை 1983ம் ஆண்டு இடப்பெயர்வு வரை தமிழர்களால் வணங்கப்பட்டு வந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த பிக்குகள் அடிக்கடி அங்கு வருவதாகவும் தாம் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை எனவும் தென்னமரவடி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இப்படியாக தொல் பொருள் திணைக்களத்தால் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் தொல்லியல் கட்டளைச்சட்டமானது தமிழர்களின் புராதனச்சின்னங்கள் அழிக்கப்பட்டு தமிழ்ப்பாரம் பரியங்கள் குழிதோண்டிப்புதைப்பதாகவே உள்ளது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் /இடங்கள் என்பதை நிறுவும் சான்றுகளில் வட கிழக்கில் காணப்படும் தொல்லியல் எச்சங்களும் சின்னங்களும் முதன்மையானவை.

அச்சின்னங்கள் இனங்காணப்பட்டு அவற்றில் உள்ள தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பௌத்த மத சின்னங்களை நிறுவுதல் வடகிழக்குப்பகுதிகளில் தமிழர் தொன்மையை சிதைக்கும் நடவடிக்கையாகும்.

வடகிழக்கு பகுதிகளில் தமிழர்களின் நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன. சிங்களக்குடியேற்றங்களும் நடைபெறுகின்றன. தொல்லியல் திணைக்களத்தினூடாக தமிழர் பூர்வீக நிலங்களிலுள்ள தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பௌத்த மத சின்னங்கள் நிறுவப்படுகின்றன. இதன்மூலம் பௌத்த ஆதிக்கத்திலுள்ளவர்கள் இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை இல்லாமல் செய்கின்றனர்.

நிறுத்தப்படல் வேண்டும் இலங்கை தமிர்களுக்கு சொந்தமானது அதிலும் வடக்கு கிழக்கு எமது தாயகம் தமிழர்களின் பூர்வீகம். இங்கு ஏற்படுத்தப்படும் திணிப்புக்கள் உடைத்தெறியப்பட வேண்டியவை.

சட்டரீதியாக அணுகி இவ்வாறான தமிழர் அடையாளங்கள் மீதான பௌத்த மத திணிப்பை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கின்றேன். என தெரிவித்தார்.

திருடப்பட்ட ஆடுகள் இணையத்தளம் மூலம் விற்பனை; அச்சுவேலியில் மூவர் கைது

image_pdfPRINT

திருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

அது குறித்து மேலும் தெரியவருவதாது ,

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த மாதம் மூன்று ஆடுகள் திருடப்பட்டு உள்ளன. அது தொடர்பில் ஆட்டின் உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடுகள் விற்பனைக்கு உண்டு என ஆட்டின் படங்களை பதிவேற்றி இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை அவதானித்த ஆட்டின் உரிமையாளர் குறித்த ஆடுகள் தன்னிடம் இருந்து திருடப்பட்டவை என்பதனை உறுதி செய்து அச்சுவேலி பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிசார் , ஆடுகள் விற்பனைக்கு உண்டு என விளம்பரப்படுத்தியவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.

அதன் போது குறித்த நபர் , தான் பிறிதொரு நபரிடமே ஆடுகளை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் என தெரிவித்தார். அதன் பிரகாரம் ஆட்டினை விற்பனை செய்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது , தானும் பிரிதொருவருமாக இணைந்து அச்சுவேலி பகுதியில் ஆட்டினை திருடி மோட்டார் சைக்கிளில் அதனை வல்லை சந்தி வரைக்கும் கொண்டு சென்று , அங்கிருந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி நெல்லியடி பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததாகவும் , தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவருடன் திருட சென்ற மற்றைய நபரையும் பொலிசார் கைது செய்தனர்.

திருடப்பட்ட ஆடுகளை  வாங்கிய நபர் மற்றும் ஆடுகளை திருடிய இருவர் என மூவரையும் பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத கடலட்டை பிடித்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது

image_pdfPRINT

பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் , அவர்களின் படகுகள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

விஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

image_pdfPRINT

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வித்தியா கொலை குற்றவாளியை காப்பாற்றியவரும் அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவருக்கும் எதற்கு எம்.பி பதவி என குறிப்பிட்டவாறு வாசகங்கள் எழுதப்பட்டு ‘நாளைய  தலைமுறை’ என்பவர்களால் அச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

விடுதலை புலிகள் தொடர்பான உரையின் சர்சையின் தொடர்ச்சியாய் பதவிஜை ராஜினாமா செய்த அவருக்கு ஆதரவாக “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு  யாழ் நகரில் அன்மையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு எதிராக ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்

image_pdfPRINT

தொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர்.

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால் 17 ஆம் நூற்றாண்டு கால பகுதியில் இக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

எண்கோண வடிவிலான இக் கோட்டை புராதன சின்னமாகும். யுத்த காலத்தில் இக் கோட்டையை கையகப்படுத்திய காரைநகர் கடற்படையினர், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, காரைநகர் கடற்படை தளத்தினுள் பெரியளவிலான உல்லாச உணவு  விடுதி ஒன்றினை அமைத்து அதனுடன் இணைந்து இக் கோட்டை பகுதியினை நவீன உல்லாச தங்குமிட விடுதியாக மாற்றி அமைத்து உள்ளனர்.

குறித்த கடற் கோட்டையில் தங்குவதற்கு உள்நாட்டவருகளுக்கு நாளொன்றுக்கு தனி அறை எனில் 11 ஆயிரத்து 550 ரூபாயும் , காலை உணவுடன் தனி அறை எனில் 13 ஆயிரத்து 750 ரூபாயும் , கோட்டையின் முழு பகுதியும் எனில் 20 ஆயிரத்து 350 ரூபாயும் அறவிடபடுகிறது.

வெளிநாட்டவர்கள் எனில் நாளொன்றுக்கு தனி அறை எனில் 110 அமெரிக்கன் டொலர்ஸ்  , காலை உணவுடன் தனி அறை எனில் 120 அமெரிக்கன் டொலர்ஸ், கோட்டையின் முழு பகுதியும் எனில்198 அமெரிக்கன் டொலர்ஸ் அறவிடப்படுகிறது.

தொல்லியல்  சின்னங்களை பாதுக்கக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு உரியவை. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தல் , அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல் என்பன தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.

இந்த நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கடற்கோட்டையினை  கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி தற்போது உல்லாச தங்குமிட விடுதியினை நடாத்தி அதிகளவிலான வருமானத்தை கடற்படையினர் பெறுகின்றனர்.

இது தொடர்பில் தொல்லியல் திணைக்களம், கடற்படையினர் இடமிருந்து கடற்கோட்டையை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமா ?

ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

image_pdfPRINT

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்டிலரி ஆற்றில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு வேலைக்குச் சென்றவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசின் உண்மை முகத்தை பிரித்தானிய எம்.பி.க்கு விளக்கிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள்

image_pdfPRINT

பிரித்தானிய நாடுமன்ற உறுப்பினரும் நீதித்துறை செயலாளருமான Lucy Frazer எம்.பி.யை சந்தித்த தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்களான பற்றிக் வசந்தராஜன் மற்றும் நந்தகோபன் சிவராசா ஆகியோர் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இன அழிப்பு குறித்து கலந்துரையாடியதுடன் பிரித்தானிய பாராளுமன்றில் இவைகள் குறித்து பேசும் படியும் கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.

லண்டன் ஹேம்பிரியில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் மேலும்,

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் இதனைவிட முக்கியமாக பிரிட்டனின் இலங்கைக்கான ஆயுத விநியோகம் அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இலங்கை அரசினால் அடக்கப்பட்டு வருகின்றமை போன்ற பல விடயங்களும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம்

image_pdfPRINT

காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியிளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பஎட்டு வருகிறது.

இப் போராட்டத்தின் போது நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைக்கப்படவுள்ளதுடன் தீச்சட்டிகளும் எடுக்கப்படவுள்ளது.

சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

image_pdfPRINT

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்துள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்களை இரண்டாம் தர விடயமாக யாரும் பார்கக்கூடாது பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள் இந்த விடயத்தில் கரிசனையுடன் செயற்படவேண்டும் மாணவர்களுக்கு கல்வி எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு விளையாட்டுக்களும் முக்கியம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.

எமது மாகாணத்தில் மாகாண,தேசிய மட்டங்களிலும் சர்வதேச மட்டத்திலும் சாதனை படைத்த மாணவர்களின் குடும்ப நிலைகளை எடுத்துப்பார்ப்போமானால் அவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

ஆகவே அவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுடைய விளையாட்டுத்துறையை விட்டு வேறு துறைகளில் நாட்டம் காட்டுகின்றனர். இனி வரும் காலங்களில் அவ்வாறான நிலை இருக்கக்கூடாது. விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தங்களை வளர்த்துக்கொண்டு நாட்டுக்கும்,எமது மாகாணத்திற்கும் எமது மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உரவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

படிப்படியாக அதனை செய்வோம். அந்த வகையிலே விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடிய மாணவர்களோ மாணவிகளோ மனவுறுதியோடும் எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கையுடனும் விளையாட்டுத்துறையில் தங்களுடைய சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்றார்.

error: Content is protected !!