Home Blog Page 279

வடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி

image_pdfPRINT

யாழில்.நடைபெற்று வரும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில்  பிரதான அனுசரணையாளர்கள் , பங்காளர்கள் மற்றும் ஊடக அனுசரணையாளர்கள் என எதனையும் யாருக்கும் வழங்கவில்லை என போட்டியினை நடாத்தும் வடகிழக்கு லீக் முறையிலான சுற்றுப்போட்டியின் (NEPL) குழு உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

குறித்த சுற்றுபோட்டி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலி பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

அதில் குறித்த சுற்று போட்டியினை நடாத்தும் என்.ஈ.பி.எல். குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில் ,

யாழில் நடைபெற்று வரும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியானது தெற்காசியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் தெற்காசியாவில் மிக பெரிய சுற்றுப்போட்டியாக அதனை நடத்த உள்ளோம்.

வடக்கு கிழக்கில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கும் முகமாகவே இந்த சுற்று போட்டியினை நடாத்த தீர்மானித்தோம். அதற்காக தனியாக சில நிறுவனங்களை அணுகி அவர்களுடன் பேசிய போது அவர்கள் அணிகளை வாங்கினார்கள்

அந்நிலையில் குறித்த சுற்றுப்போட்டி நடக்கும் போது ஓரிரு அணிகளை வாங்கிய நிறுவனங்களின் விரும்ப தகாக செயல்களால் சில பிரச்சனைகளை எதிர்கொண்டோம். இதுவரையில் இந்த சுற்றுப்போட்டியில் எந்த நிறுவனமும் அனுசரணையாளராகவோ , பங்காளர்களாகவோ இல்லை.

வடக்கு கிழக்கு சேர்ந்த 12 அணிகள் இந்த சுற்று போட்டியில் கலந்து கொள்கின்றன யாழ்.மாவட்டத்தினை பிரதி நிதித்துவ படுத்தி  நான்கு அணிகளும், மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு அணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்தி ஒரு அணியும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியும், வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியும், திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியும், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி ஒரு அணியும், அம்பாறை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி ஒரு அணியும், ஆக 12 அணிகள் இந்த போட்டியில் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடுகின்றார்கள். ஆனாலும் மாவட்ட ரீதியில் நான்கு வீரர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.  வெளிநாடு மற்றும் வெளிமாவட்ட வீரர்கள் விளையாடலாம்.

வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிமாவட்ட வீரர்கள் சிலர் திறமையானர்வர்கள். அவர்களுடன் விளையாடுவதன் மூலம் உள்ளூர் வீரர்கள் சில நுட்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் சில அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சுற்றுப்போட்டிக்கு இதுவரைக்கும் பிரதான அனுசரணையாளர்கள் , பங்காளர்கள், மற்றும் ஊடக அனுசரணையாளர்கள் என எதனையும் யாருக்கும் வழங்க வில்லை. பலரை அதற்காக தொடர்பு கொண்டு உள்ளோம்.

சில ஊடக நிறுவனங்கள் அணிகளின் உரிமையார்களாகவே உள்ளனர் அவர்கள் பங்காளர்களோ , அனுசரணையாளர்களோ அல்ல. அவர்கள் வெறுமன அணிகளின் உரிமையாளர்கள் மாத்திரமே.

முதல் பரிசு 50 இலட்சம் ரூபாயும்,  இரண்டாம் பரிசு 30இலட்சம் ரூபாயும் , மூன்றாம் பரிசு 15 இலட்ச ரூபாயும் நான்காம் பரிசு  05 இலட்ச ரூபாயும் என அறிவித்துள்ளோம்.

இந்த சுற்று போட்டியின் இறுதி போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  26ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்து உள்ளோம். என அவர்கள் தெரிவித்தனர்.

‘எனது அரசியல் பயணம் தொடரும்’

image_pdfPRINT

எனக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதற்காக செயற்பாடுகளை முடக்கும் வடக்கு அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்டவர்களை மறந்துவிட்டு பொய்யுரைக்கின்றார்கள்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் அனந்தி சசிதரன் ‘நமது ஈழநாடு’ இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

நேர்கண்டவர்: நம்மவன்

கேள்வி:- வடமாகாண சபையில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக பதவி வகிக்கும் நீங்கள் உங்களின் அமைச்சின் ஊடாக எத்தகைய செயற்பாடுகளை இதுவரையில் முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்:- முதலாவதாக எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி போதமையாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுக்கு 83 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி எம்மால் வினைத்திறனான ஒரு செயற்பாட்டினை முன்னெடுக்க முடியாதுள்ளது.

அதனை விடவும் எமது பிரதேசம் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான பிரதேசம் என்பது உலகறிந்த விடயம். எத்தனையோ உள்ளுர் , சர்வதேச நிறுவனங்களின் உதவிகள் கிடைக்கின்றன. இருப்பினும் எனது அமைச்சின் கீழ் காணப்படும் விடயதானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு பட்டவையாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் பதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நன்கறிந்த எனக்கு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அதற்கு நிதி பிரதான காரணமாக உள்ளது.

மேலும் இதனைவிடவும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பாக தகவல்களை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சேகரிக்கின்றோம். காரணம் அரச அதிகாரிகளிடத்தில் அவை தொடர்பான தகவல்களை கோருகின்றபோது அவற்றை உடனடியாக பெற்றுக்கொடுப்பதில் அசமந்தமான போக்கினையே கொண்டிருக்கின்றார்கள். இதனால் நானும் சமுக நலனில் அக்கறை கொண்ட எனது சக உறவுகளும் இணைந்து கள ஆய்வுகள் மூலம் அத்தகைய தகவல்களை ஒன்று திரட்டி அவற்றினை விடயங்களுக்கு பொறுப்பான மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பி அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கின்றபேதும் அவையும் இன்னமும் பாராமுகமாகவே இருக்கின்றனர்.

நேரடியாக கூறுவதானால் பதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அமைச்சு சார்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற அனைத்துக்கும் ஏதாவது ஒரு காரணத்தினைக் கூறி முட்டுக்கட்டை இடுக்கின்ற செயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தின் துணையுடன் மிகக் கச்சிதமான முன்னெடுக்கப்படுகின்றது. மக்களின் வலிகளை நன்கறிந்த அரச அதிகாரிகளும், அந்த மக்களின் ஆணைப்பெற்ற அரசியல்வாதிகளும் தமக்கு பெயர்கிடைத்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் துணைபோகாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகின்றது.

கேள்வி:- எவ்வாறாயினும் அமைச்சர் என்ற அடிப்படையில் உங்களுடைய ஆளுகைக்கு உட்பட விடயதானங்களில் அதிகாரங்களை செலுத்த முடியுமல்லவா? அதனைப் பயன்படுத்தி எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்:- எனது ஆளகைக்கு உட்பட்டுள்ள திணைக்களங்களின் ஊடாக இயலுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முழுமையாய அமையவில்லை. அதற்குரிய காரணங்களை நான் ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். அவ்வாறு இருக்கையில் எனது குறித்தொகுக்கப்பட்ட நிதியின் ஊடாக பல்வேறு உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கான கணிசமான பணிகள் இடம்பெறுகின்றன. அத்துடன் கூட்டுறவுதொடர்பான விடயங்களும் முன்னெடுத்து வருகின்றோம்.

அதேநேரம் எமது புலம்பெயர் உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டு வழங்கி வருகின்ற உதவிகளையும் நேரடியாகவே பயனாளிகளிடத்தில் கையளித்து வருகின்றேன். கடந்த காலங்களைப் போன்று புலம்பெயர் உறவுகளின் பேருதவிகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

அதனை விடவும் எமது தயாகத்தில் சிறுகைத்தொழில் முதலீடுகளை புலம்பெயர் உறவுகள் செய்வதற்கு முன்வருவார்களாயின் அது எமது மக்களின் நிரந்த வாழ்வியல் வருமானத்திற்கு ஆணிவேராக அமையும். அது தொடர்பில் புலம்பெயர் உறவுகள் அரசியல் விரும்பு வெறுப்புக்களுக்கு அப்பால் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது.

கேள்வி:- அமைச்சராக இருக்கின்ற போதும் உங்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக கூறியுள்ளீர்கள்? வடக்கு மாகாண சபையின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இதுதான் நிலைமையா? அல்லது நீங்கள் மட்டும் இலக்கு வைக்கப்படுகின்றீர்களா?

பதில்:- மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள், அசமந்தமான போக்குகள், புறக்கணிப்புக்கள், தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் வடமாகாண சபையின் அனைத்து அமைச்சுக்களையும் பாதிப்பதாகவே உள்ளன.

ஆனால் எனது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரினதும் தலையீடுகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. அத்துடன் அரச அதிகாரிகளும் தமது தொழிலைப் பாதுகாப்பதற்காக இத்தகைய அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஆடவேண்டியவர்களாகி விட்டனர்.

கேள்வி:- தாங்களும் கூட்டமைப்பின் அங்கத்தவராக இருக்கையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் உங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க காரணம் என்ன?

பதில்:- நான்காம் ஈழப்போரின் நேரடிச்சாட்சியமாகவும் வடக்கு மக்களின் இரண்டாவது மிகப்பெரும் ஆணைபெற்றவராகவும் வடக்கு மாகாணசபையில் நான் இருக்கின்றேன். ஏன்னிடத்தில் ஒழிப்பதற்கு எதுமில்லை. இறுதி யுத்தத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் அப்பயே பகிர்கின்றேன். நீதி கோருகின்றேன். எனது குடும்பத்திற்கும் நானே தலைமை தாங்குவதால் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வலிகள் உள்ளிட்ட அனைவரினதும் நிலைமைகளை நன்கு அறிவேன். அதற்காக குரல்கொடுக்கின்றேன். இயலுமான வரையில் அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றென்.

தற்போது அமைச்சராக இருக்கின்றமையால் அத்தகைய செயற்பாட்டு ரீதியான முயற்சிகளில் என்னால் வெற்றிபெறுமிடத்து தமது அரசியல் இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்று பலர் கருதுகின்றார்கள். ஆகவே தான் தமது அரசியல் ஆதாயத்துக்கான எனது செயற்பாடுகளை முடக்குவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது எமது மக்களே என்பது அவர்களின் மூளைக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்திருந்தும் தமக்கு தமது அரசியல் எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் செயற்படுகின்றார்களா? என்பது தெரியாது.

அதனைவிடவும் ஒரு பெண் அரசியல்வாதியாக நான் வினைத்திறனுடன் செயற்பட்டு விடக்கூடாது என்ற மனோநிலையும் சிலருக்கு உள்ளது. என்னைப்பொறுத்த வரையில் எனது அரசியல்பணியாக விருந்தாலும் சரி அமைச்சுப் பணியாகவிருந்தாலும் சரி பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் நகர்ந்து செல்கின்றது. அதற்காக மனந்தளர்ந்து விடவில்லை. இவற்றுக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதற்கான மனவலிமையை விடுதலைப்போராட்டம் கற்பித்திருக்கின்றது. அத்தோடு எனது மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணை துணை நிற்கின்றது.

கேள்வி:- இலங்கை தமிழரசுக்கட்சி தங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. அதன் தற்போதைய நிலைமை என்ன?

பதில்:- இலங்கை தமிழரசுக்கட்சி அது தொடர்பில் என்னிடத்தில் எத்தகைய விளக்கங்களையும் கோரவுமில்லை. அது தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.அந்தக் கட்சியினர் தான் என்னை அரசியலில் பிரவேசிக்குமாறு அழைத்தனர். நாளைடைவில் என்மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் பாசத்தினையும் பார்த்து அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது போய்விட்டது என்று தான் நினைக்கின்றேன். அதன் காரணத்தால் தான் வெவ்வேறு கோணங்களில் குற்றச்சாட்டுக்களை ஆதரமின்றி முன்வைத்தனர்.

கட்சி, கொள்கை, தலைமைத்துவம் அனைத்துமே மக்களை மையப்படுத்தியது. அதிலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்தினை பிரதிநிதித்துவப்படு;த்தும் ஒரு கட்சி, எத்தனை தூரம் கொள்கையில் உறுதியாகவும் பற்றாகவும் இருக்க வேண்டும். உரிய கட்டமைப்புடன் செயற்பட வேண்டும். ஆனால் எமது தாயகத்தில் நடப்பதோ தலைகீழாக இருக்கின்றது. கூட்டமைப்பு என்ற பெயரை முன்னால் வைத்துக்கொண்டும் விடுதலைப்புலிகளின் தியாகத்தினை தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்திக் கொண்டும் மக்களை வாக்களிக்கும் இயந்திரகங்களாகவே பார்க்கின்றார்கள்.

தேர்தல் மேடைகளாக இருக்கட்டும், பொது மேடைகளாக இருக்கட்டுக்கும், பாராளுமன்றமாக இருக்கட்டும் உறுப்பினர்களால் வெளியிடப்படும் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் நேரெதிரான நிலைமைகளே காணப்படுகின்றன. என்னால் அவ்வாறு இரண்டை வேடந்தரிக்க முடியாது. ஆவ்வாறு தரித்து ஏகபோக அரசியல் வாழ்க்கைக்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

எனது கணவனையும் ஏனை எனது உறவுகளைப் போன்றே எனது கையால் இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கின்றேன். இன்று காணமல் போயுள்ள தமது உறவுகளை தேடும் ஏனை சொந்தங்கள் போன்றே நானும் எனது கணவரைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். ஷெல் மழைகளுக்கு மத்தியலும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நானும் மக்களோடு மக்களாக முள்ளிவாய்கால் ஊடாக பயணித்தே உயிர்பிழைத்தேன். அந்த தருணங்களில் மக்கள் பட்ட வலிகளை நேரில் பார்த்தவள் நான். எனக்கும் அதே வலிகள் ரணங்களாக உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒரு அரசியல்வாதியாக மட்டும் கோலங்கொள்ள முடியாது.

நேரடியாகவும் வெளிப்படையாகவும் கருத்துக்களை கூற விளைகின்றபோது தான் எனது கட்சிக்கும் எனக்கும் இடையில் முரண்பாடுகள் எழுகின்றன. போலியாக நடிப்பதற்கே உந்துதல் அளிக்கின்றார்கள். அதற்கு என்னால் முடியாது. அதனை என்றும் செய்யப்போவதுமில்லை.

கேள்வி:- வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைதற்கு சொற்பகாலங்களே உள்ளன. டிசம்பரில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான நிலையில் உங்களின் அரசியல் பயணம் எவ்வாறு அமையும்?

பதில்:- தற்போதைய சூழலில் வடமாகாண முதலமைச்சர் தலைமை ஏற்றால் கொள்கைரீதியான பற்றுறதியுடன் கூட்டணியொன்று அமைவதற்கு சாத்தியமான சூழல் இருக்கின்றன. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படும் பட்சத்தில் எனது இலக்கும் நோக்கமும் அத்தரப்பினருடன் இணைந்தாக இருக்கின்ற போது நிச்சயமாக அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டால் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன்.

அதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக்கட்சி எனக்கு வாய்ப்பு வழங்குமா இல்லையா என்பதை கூறமுடியாதுள்ளது. ஆவ்வாறு வாய்ப்பு வழங்கினாலும் கடந்த கால அனுபவங்களை வைத்து பார்க்கையில் அதனை மீள்பரிசீலனை செய்யவேண்டி நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளேன். மேலும் தவறுகளே இழைக்காத என்மீது கட்சி சார்ந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிக்கிடைக்கின்றது. இருப்பினும் எவ்விதமான அறிவிப்புக்களும் கிடைக்கவில்லை.

இவ்வாறெல்லாம் பல்வேறு நிலைமைகள் தற்போதுள்ளன. ஏவ்வாறாயினும் எனது மக்கள் எனக்கு கடந்த தேர்தலில் ஆணை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கான சேவையில் ஈடுபட நானும் தீர்மானித்து விட்டே அரசியலில் பிரவேசித்தேன். ஆகவே எனது மக்களுக்கான சேவை பயணம் தொடரும் அது எவ்வாறு அமையும் என்பதை தற்போதைய சூழலில் கூறமுடியாது. அதற்கான காலம் இதுவல்ல. நிச்சயமாக அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவேன்.

கேள்வி:- வடக்கு மாகாணத்தில் மகளிர், மற்றும் சமுக சேவைகள் போன்ற விவகாரங்களுக்கான பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்கின்றவர் என்ற அடிப்படையில் அண்மைக்காலமாக குடாநாடு உட்பட வடக்கில் சட்டம் ஒழுங்குக்கு அப்பாற்பட்டதொரு வகையிலான அச்சமான சூழல் ஏற்பட்டிருக்கின்றதே?

பதில்:- ஆம், உண்மைதான். வடக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் தங்கியுள்ளனர். இவர்களை விட பெரும்பான்மையினத்தினைச் சேர்ந்த பொலிஸார் கடற்படையினர், விமானப்படையினர் என தங்கியுள்ளனர். இவர்கள் தான் வடக்கு மாகாணத்தின் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பினைக் கொண்டிருப்பதாக மத்திய அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இவர்கள் இருக்கின்றபோது தான் வடக்கில் வாள் வெட்டுகள் முதல் போதைப்பொருள் வருகை, சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுதல் என அனைத்து செயற்பாடுகளும் பட்டப்பகலிலேயே அரங்கேறும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

வடக்கு கடல் உட்பட இலங்கையின் கடற்பரப்பினையே புலிகளின் 12இற்கும் மேற்பட்ட ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்து வெற்றிகொண்டதாக சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கை கடற்படையினரே தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் கேரளக்கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எவ்வாறு நாட்டிற்குள் வருகின்றன என்றொரு கேள்வி இருக்கின்றது. இதற்கு பதிலளிக்க வேண்டியது கடற்படையினரே.

இவர்களைவிடவும் எமது மக்களின் நிலங்களை அபகரித்து அதில் நிரந்தரமாக அமர்ந்துகொண்டு வாழ்வாதார நிலங்களில் விவசாயம் முதல் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் இராணுவம் பட்டப்பகலில் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றபோது வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது. முன்னாள் போராளிகள் எவருடனானவது கதைத்தால் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பின்தொடர்ந்து பார்க்கும் இராணுவமும் புலனாய்வாளர்களும் இந்த வாள் வெட்டுக் கும்பலை ஏன் கண்டறிய முடியாது உள்ளது.

மறுபக்கத்தில் வித்தியா முதல் ரெஜினா வரையில் பிஞ்சுகளை நாம் பறிகொடுத்து விட்டோம். இதனைவிடவும் பல்வேறு இளம் பெண்கள் கர்பிணிகளாகின்ற செய்திகளையும் அவர்களது குடும்பங்கள் அதனால் படுகின்ற வேதனைகளையும் நாள்தோறும் கேள்வியுற்றவாறே இருக்கின்றோம். உண்மையின் இந்த சிறுமியர் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும் அவை தொடர்பில் முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையின் காரணத்தால் தான் இவ்வாறான நிலைமையொன்று தொடர்ச்சியாக நீடித்துக்கொண்டிருக்கின்றது.

ஆகவே தான் பொலிஸ் அதிகாரத்தினை மாகாணசபைக்கு வழங்குமாறு எமது முதலமைச்சர் உட்பட நாம் கோரிநிற்கின்றோம். பொலிஸ் அதிகாரத்தினை எம்மிடத்தில் வழங்குமிடத்து அதன் மூலம் இத்தகைய சமுக வரையறை மீறல்களை உரியவகையில் கட்டுப்படுத்தலாம் என்பது எமது நிலைப்பாடாகின்றது.

கேள்வி:- டெனிஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய உத்தரவின் காரணமாக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றதல்லவா?

பதில்:- இந்த விடயம் சம்பந்தமாக முதலமைச்சர் உரிய பதிலளித்து விட்டார். ஆகவே அது தொடர்பில் நான் கருத்துக்களை தெரிவிப்பது பொருத்தமானதல்ல. எம்மைப்பொறுத்த வரையில் பதவிகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எமது பேச்சும் செயற்பாடும் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

கேள்வி:- பதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்கும் என்பதிலும் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வொன்று கிடைக்கும் என்பதிலும் நீங்கள் எத்தனை தூரம் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:- பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதாயின் அது சர்வதேச நீதி விசாரணையொன்றின் மூலமாகவே சாத்தியமானதாக அமையும். எமது உறவுகளும் நாங்களும் காணமல் போனவர்களுக்காகவும், அரசியல் கைதிகளுக்காகவும், எமது வாழ்விடங்களுக்காகவும் வீதியோரங்களிலே போராட்டங்களை 500நாட்களை கடந்து முன்னெடுத்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வந்த ஜனாதிபதி, பிரதமரே அல்லது எமது மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதிகளோ அது தொடர்பில் பெரியளவில் அக்களை செலுத்தியதாக இல்லை. பாராமுகமாகவே இருக்கின்ற நிலைமை தான் உள்ளது.

அதற்காக எமது போராட்டங்களை கைவிட்டு நாம் பின்னகரப்போவதில்லை. சர்வதேச சமுகம் இந்த இடத்தில் தெளிவானதொரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும். பிரதான கட்சிகள் இணைந்திருந்தாலும் சரி, பிரிந்திருந்தாலும் சரி அவர்கள் தமது சுயலாப அரசியலையே முன்னிலைப்படுத்திக்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் மத்தியில் யார் அதீத சிங்கள பௌத்த தேசிய வாதிகள் என்பதை காட்டுவதற்கே முன்றியடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை தரப்பபோவதுமில்லை. பொறுப்புக்கூறல் பொறிமுறையின் பிரகாரம் நீதியை வழங்கப்போவதுமில்லை என்பதே இறுதியானது. எனவே தான் நாங்கள் சர்வதேச சமுகத்தின் தலையீட்டினைக் கோருகின்றோம். இதற்கு புலம்பெயர் சமுகம் பாரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றது.

எனினும் எமது மக்களின் ஆணைபெற்றவர்கள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதானது அனைத்தையும் பலவீனப்படுத்துவதாகவே உள்ளது. முண்டுகொடுப்பவர்களின் கருத்துக்களைத் தாண்டி சர்வதேச சமுகத்தினர் வடக்கிற்கு நேரடியாக வந்து கள நிலைமைகளை பார்வையிட வேண்டும். அதனடிப்படையில் ஒரு நாட்டின் இறைமை என்பதற்கு அப்பால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக உடனடியான தலையீட்டினைச் செய்யவேண்டும்.

அதற்கு தவறுகின்ற பட்சத்தில் சர்வதேச நாடுகளும் உரிமைக்காக போராடிய இனத்தினை ஏமாற்றி விட்டன என்ற வரலாற்றுப் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமன்றி உலக அரங்கில் ஜனநாயகம், மனிதாபிமானம், நீதி,நேர்மை பற்றி அதிகம் பேசுகின்ற சர்வதேச சமுகம் அது தொடர்பில் பேசுவதற்கே அருகதையற்ற நிலைமைக்கு தள்ளப்படும் ஆபாயமும் உள்ளது.

ஆகவே சர்வதேச சமுகம் எமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாது காரியத்தில் இறங்வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்காக குரல்கொடுப்பதற்கும் ஒன்றுபட்டு உழைப்பதற்கும் என்றும் நான் தயாராகவே உள்ளேன்.

எமக்கு உதவிகள் வேண்டாம்; எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும்

image_pdfPRINT

-காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வில் தாய் ஒருவர் கண்ணீர்மல்க உருக்கம்

உழைப்பது 100 ரூபாய் என்றாலும் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் உங்களுடைய எந்தவொரு உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும். என தாய் ஒருவர் கண்ணீர்மல்க கூறினார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று சனிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.  மேற்படி அமர்விலேயே குறித்த தாய் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும் அந்த தாய் மேலும் கூறுகையில், 

என்னுடைய ஒரு மகனை சுட்டு படுகொலை செய்து விட்டார்கள். மற்ற மகனை பிடித்து சென்று விட்டார்கள். என்னுடைய பிள்ளையை தேடி நாய் மாதிரி எல்லோருக்கும் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம். 

பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. அந்த எல்லையை நாங்கள் தாண்டி விட்டோம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்றாலும் உழைத்து கஞ்சியோ, கூழோ சாப்பிடுவதற்கு எங்களால் முடியும். 
 
உங்களுடைய எந்த உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும். மரியாதை இழந்து வீதி வீதியாக நின்று எங்கள் பிள்ளைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு முடிவு வேண்டும். 

இந்த அரசாங்கம் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அந்தளவுக்கு எங்கள் நிலமை உள்ளது. எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும் என்றார். 

மேலும் ஒரு தாய் கூறுகையில், 

அழுவதற்கு கண்ணீர் இல்லை. சத்தமிடுகிறீர்கள். குழப்புகிறீர்கள், என்றெல்லாம் கூறுகிறீர்கள். உங்களுடைய பிள்ளை காணாமல்போனால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? காலத்திற்கு காலம் விசாரணை என வருகிறீர்கள். நீங்கள் மனிதர்கள் தானா? என்னுடைய பிள்ளை 2007ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து கடத்தப்பட்டான். 

தனிமையில் வாழ்கிறேன். ஆறுதலுக்கும் கூட ஒருவர் இல்லை. இன்னும் எத்தனை வருடங்கள் எங்களை இப்படி அழ வைப்பீர்கள்? எங்கள் பிள்ளைகளின் தகவல்களை வெளிப்படுத்துங்கள் என கூறினார்.  

எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்- சாலிய பீரிஸ்

image_pdfPRINT

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடாத்தப்படும் அது இராணுவ தளபதிகளாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இருந்தாலும் சரி. அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினர் நேற்று சனிக்கிழமை காலை யாழ்.வீரசிங்க ம் மண்டபத்தில் விசேட அமர்வு ஒன்றை நடத்தியிருந்தனர். 

அந்த அமர்வின் நிறைவில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸிடம் ஊடகவியலாளர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனவர்கள் விடயத்தில் இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் விசாரிக்கப்படுவார்களா? என கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறிப்பிடுகையில்,  குற்றஞ்சாட்டப் பட்டவர் எவராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள். அந்த விசாரணைகளில் அழுத்தங்களுக்கு இடமளிக்கப்படாது. பாரபட்சங்கள் காட்டப்படாது. என கூறினார். 

இதனை தொடர்ந்து போரின் நிறைவுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  இருந்தமை தொடர்பாக கேட்டபோது ஜனாதிபதியாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தாலும், சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படும். அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

 மேலும் போர் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் விடயத்தில் இராணுவமாக இருந்தாலும் சரி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீதும் விசாரணைகள் நடாத்தப்படும் என்றார். 

இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்

image_pdfPRINT

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும் , அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

குறித்த குடும்ப பெண் நேற்றைய தினம் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை – கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சைக் கு சென்று வீடு திரும்பும் போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இனம் தெரியாத கும்பல் அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவையால் தலையில் தாக்கி உள்ளனர். குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் அவ்விடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதேவேளை அவரது ஆறு வயது மகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் மகனும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.

பின்னர் வீதியால் வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த குடும்ப பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரது மகனையும் மீட்டு கோட்டைக்காடு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

பின்னர் குறித்த குடும்ப பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டனர்.

அது தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராக குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறித்த வழக்கு நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் அதனை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

அதற்கு மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடந்த காலத்தில் அச்சுறுத்தல் இருந்தமையால் மனுதாரர்கள் மனுதாக்கல் செய்யவில்லை எனவும் தற்போது காலம் மாறியுள்ளதால் மனு தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் கடந்த தவணையின் போது மனுதாரர்களை அச்சுறுத்தும் வகையில் நீதிமன்ற வளாகத்தினுள் அதிகளவான புலனாய்வாளர்கள்  நடமாடினார்கள் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதற்கு பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் என தெரிவித்திருந்தார்.

அதற்கு நீதிபதி , பாதுகாப்பு வழங்க எனில் அதில் மன்று தலையிட முடியாது. ஆனால் மனுதாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலில் ஈடுபட்டால் , அது தொடர்பில் எதிர் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலையே குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் உதவியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கு.குருபரன் , கி.சுபாஜினி மற்றும் வி.திருக்குமரன் ஆகியோர் முன்னிலையாகி வருகின்றனர்.

போதைப்பொருக்கு எதிரான செயற்திட்டங்கள் வலி கிழக்கில் ஆரம்பம்

image_pdfPRINT

வலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கடந்த பிரதேச சபைக் கூட்டத்தில் எமது மண்ணில் இருந்து போதையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பிரஸ்தபிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், முதலில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அச்சுவேலியை மையப்படுத்தியும் அதனைத் தொடர்ந்து காலப்போக்கில் ஏனைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அச்சுவேலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பமாகின.

அச்சுவேலி நகரில் சில மணி நேரங்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கூடிய பிரதேச சபையின் ஊர்திகள் போதைக்கெதிரான விழிப்புணர்வு வாசங்களை ஒலிபெருக்கி ஊடாக அறிவிப்புச் செய்தவாறு நகர் வலம் வந்தன. இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் போதைக்கு எதிரான சுலோகங்களுடன் நின்று போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்புச் செய்தனர்.

பின்னர் அச்சுவேலி நகரின் வீதிகள் வழியாக பேரணியாகச் சென்ற விழ்ப்புணர்வாளர்கள் பொது இடங்கள், தனியார்கல்வி நிலையங்கள், சந்தை என மக்கள் கூடும் இடங்கள் தோறும் சிறு சிறு பிரசாரக் கூட்டங்களை நடத்தியதுடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இந் நிகழ்வுகளில் அச்சுவேலி பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன்  குறிப்பிடத்தக்கது.

வடக்கு மீனவர்களுக்கு நவீன தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்

image_pdfPRINT

வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மீனவர்கள் தொழினுட்பம் மற்றும் தொழில் ரீதியான பயிற்சிகள் இன்றி தொழில் செய்கின்றார்கள். அவர்களை தொழில் ரீதியாக முன்னேற்ற பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

சமுத்திரவியல் பல்கலை கழகத்தில் குறுகிய கால பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடலட்டை பிடித்தல் , ஆழ்கடல் சுழி ஓடல் , ஜீபிஎஸ் பாவனை உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெறுகின்ற.

அந்த பயிற்சி நெறிகளில் வடக்கு மீனவர்கள் இணைந்து கொண்டு தமது தொழில் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

காணாமற் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

image_pdfPRINT

காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும்  அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மாவட்ட ரீதியாக காணாமற் போனோரின் உறவினர்களைச் சந்தித்து வருகின்றது.

இதற்கமைய இன்றைய தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமற் போனோரின் உறுவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் காணாமற் போனோரின் உறவினர்கள் வீரசிங்கம் மண்டபம் முன்னாள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எத்தனையோ குழுக்கள் அமர்வுகளை நடத்தியும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க ப்படாத நிலையில் இந்த அலுவலகத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை.

அத்தோடு எம்மை ஏமாற்றுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் எனத் தெரிவத்து கதறியழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலட்டை பிடிபதற்கு எதிராக போராட முன் வர வேண்டும்- சமாச தலைவர்

image_pdfPRINT

வடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிபதற்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமராட்சி கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். அதற்கு எதிராக மீனவர்கள் போராட்டங்களை நடாத்தி வந்தனர்.

தற்போது அந்த போராட்டம் சிறு பின்னடவை சந்தித்தள்ளது. வெளிமாவட்ட மீனவர்களுக்கு அப்பகுதிகளில் உள்ள ஐந்து சங்கங்கள் அனுமதி வழங்கி உள்ளன. சில தனிநபர்களும் தமது காணிகளை கொடுத்துள்ளனர். அதற்கு குத்தகை பணமாக பெருமளவான பணத்தினை பெற்றுக்கொண்டு உள்ளனர். தற்போது அதனை திடீரென திரும்ப வழங்க முடியாமை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சில பிரச்சனைகள் உள்ளமையால் , போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இலங்கையிலையே வடக்கு கடலில் தான் மீன் வளம் அதிகமா உள்ளது. அதனால் தான் வடக்குக்கு எல்லோரும் வருகின்றார்கள். அதற்கு காரணம் ஆழ் கடலில் உள்ள மீன்கள் இனப்பெருக்கத்திற்கு முட்டையிடுவதற்கும் , உணவுக்கும் கரை பகுதிகளை அண்டி இரவிவில் வரும்.

அவ்வேளைகளில் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபட்டால் அவை கரைக்கு வராது. அத்துடன் கடலுக்கு அடியில் உள்ள பவள பாறைகளையும் அழிப்பதனால் மீன் வளம் குறைந்து கொண்டே செல்கின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் பிடித்த மீனுக்கு தற்போது இருபது கிலோ மீற்றர் செல்ல வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி எமக்கு தேவையில்லை என கடலில் கொட்டிய மீன்கள் தற்போது கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகின்றது. அவ்வளவுத்துக்கு மீன் வளம் குறைந்துள்ளது. இந்த நிலை நீடிக்கும் எனில் நாம் கடற்தொழிலை விட்டு பிச்சை எடுக்க செல்ல வேண்டும்.

வெளிமாவட்ட மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் மத்திய அமைச்சருடன் நேரில் சந்தித்து கதைப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு தமிழ் அரசியல்வாதிகள் பலரிடம் கேட்ட போதும் யாரும் எமக்கு உதவ முன்வரவில்லை.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவே எமக்கு உதவ முன் வந்து அமைச்சருடன் கதைப்பதற்கு ஏற்பாடு செய்து தந்தார்.

எமது சில அரசியல் வாதிகள் ஒரு படகில் இருவருக்கு மேல் கடலட்டை பிடிக்க செல்ல கூடாது, இரவில் வெளிச்சம் பாய்ச்சி பிடிக்க கூடாது , கரையில் இருந்து ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றே பிடிக்க வேண்டும் என்பது இலங்கையில் உள்ள சட்டம். அதனை வடமராட்சி கடலில் கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் பின் பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

எமது கடல் வளத்தை பாதுகாக்கும் எந்த எண்ணமும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செயற்பட்டு உள்ளார்கள். எனவே எமது கடல் வளத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரம் திரட்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு

image_pdfPRINT

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

மருத்துவமனைகள் , வீடுகளில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தகவல் சேகரிப்பதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை.

அது தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவரங்கனிடம் கேட்ட போது,

குறித்த விபரங்களை தருமாறு எமது அமைச்சிடம் கோரி இருந்தார்கள். அதனை வழங்க எமக்கு அனுமதியில்லை. அது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அங்கிருந்து விபரங்களை கொடுக்கும்மாறு பணித்தால் , தகவல்களை வழங்குவோம் என தெரிவித்தார்.

சட்ட ஒழுங்கு அமைச்சர் பொலிஸ்மா அதிபர் யாழில் இருந்தும் கூட இன்று வாள் வெட்டு

image_pdfPRINT

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ள போது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்தனர்.

அவர்கள் இன்றும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொடிகாமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டுக்குள் புகுந்து 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் (வயது 44) என்பவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் இன்று காலை 9 மணிவரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கூறி 24மணி நேரத் திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துமீறி நுழைந்த 16 இந்திய மீனவருக்கு இருவருடகால சிறை

image_pdfPRINT

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு  இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்தச் சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், 16 மீனவர்களும் இதே குற்றத்தை மீளவும் செய்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று கோடிட்டுக்காட்டினார்.

அத்துடன் படகுகளைப் பறிமுதல் செய்வதா அல்லது தண்டப் பணத்துடன் மீளக் கையளிப்பதா என்ற கட்டளையை வழங்க வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நீதிமன்று  ஒத்திவைத்து.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.

அத்துடன், கடந்த 8ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு ஒன்றில் தொழிலில் ஈடுபட்ட மேலும் 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இரு தினங்களிலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் மூன்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்திய மீனவர்கள் 16 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான், இன்றைய தினம் 13ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அந்நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் அதிபதியின் சார்பில் யாழ்ப்பாண அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

“இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி வெளிநாட்டு வள்ளங்களில் தொழிலில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்று இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய மீனவர்கள் 16 பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.

“16 குற்றவாளிக்களுக்கும் இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இதே குற்றச்செயலை 16 பேரும் மீளவும் செய்கின்ற போது, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

16 குற்றவாளிகளையும் உடனடியாக நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் தீர்ப்பளித்தார்.

மேலும் புதிய சட்டத்தின் கீழ் படகுகளுக்கு அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டப் பணம் அறவிடுவதா? அல்லது அரசுடமையாக்குவதா? என்ற கட்டளை ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் என நீதிமன்று வழக்கை ஒத்திவைத்தது.

error: Content is protected !!