Home Blog Page 275

கடற்படை நீர் எடுக்க தடை

image_pdfPRINT

ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞா.லக்ஸ்மன் கடற்படையினர் பொதுமக்களின் பாவனையில் உள்ள நன்னீர் கிணற்றில் கடற்படையினர் நன்னீர் எடுப்பதனை தடை செய்ய வேண்டும் என கோரி பிரேரணையை முன் மொழித்தார்.

குறித்த பிரேரணை சபையில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பிரேரணையின் பிரதிகளை ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் , ஊர்காவற்துறை கடற்படை தளபதி , யாழ்.மாவட்ட செயலாளர் , வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது.

மண் குழி பிரதேசத்தில் காணப்படும் நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் தமது தேவைக்காக தினமும் 10 ஆயிரம் லீட்டர் நன்னீரை நீர் தாங்கியில் எடுத்து செல்கின்றனர்.

அதனால் நிலத்தடி நீர் வற்றி , நீர் உவர் தன்மையாக மாற்றம் அடைந்து வருகின்றது. அதனால் மக்கள் பாவனைக்கு நீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதனால் அப்பகுதி மக்கள் தமது அன்றாட தேவைக்கு நன்னீரை பெற்றுக்கொள்ள பல சிரமரங்களை எதிர்நோக்கு கின்றார்கள். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீரை எடுக்க தடை விதிக்க வேண்டும் என குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட 60 பெண்

image_pdfPRINT

தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் 60 வயது பெண்ணொருவர்.

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்டனர்.

உடனே சுதாகரித்துக்கொண்ட குறித்த பெண் சங்கிலியை அறுத்த கொள்ளையனின் ரீ – சேர்ட்டை எட்டி பிடித்துக்கொண்டார். அதனால் கொள்ளையர்கள் நிலை தடுமாறிய போது , கொள்ளையர்கள் அறுத்த சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார். அத்துடன் கொள்ளையர்களின் கையடக்க தொலைபேசியையும் அவர்களிடம் இருந்து எடுத்துள்ளார்.

அந்நிலையில் கொள்ளையர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெண் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் தன்னால் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியையும் பொலிசாரிடம் கையளித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , கையடக்க தொலைபேசி ஊடாக கொள்ளையர்களை இனம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களை குறிவைத்துள்ள இலங்கை அரசு

image_pdfPRINT

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க நேற்று (07) அழைப்பு விடுத்தார்.

இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது?,” என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளமை இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களது பணத்தை மட்டும் இலக்கு வைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே இலங்கை அரசின் முகவர் அமைப்புக்கள் புலம்பெயர் தேசத்திலுள்ள பல அமைப்புக்களையும் உடைத்து அவர்களில் பலரையும் இலங்கைக்கு தருவித்துக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் கூட மஹிந்த ஆதரவு கும்பலொன்று வடக்கிற்கு வருகை தந்திருந்ததுடன் வடக்கு ஆளுநரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை

image_pdfPRINT

யாழில்.கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்து வந்த நிலையத்தை போலீசார் முற்றுகையிட்டு சோதனை நடாத்திய போது , 3 கிலோ மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விற்பனை நிலையத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினார்கள்.

அதன் போது குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த மாவா போதை பொருள் 3 கிலோவை பொலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் கடையில் விற்பனைக்கு நின்ற இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அதேவேளை குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 19ஆம் திகதியும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த பெருமளவான மாவா போதை பொருளும்  மற்றும் மாவா போதை பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் பெருமளவையும் தாம் கைப்பற்றி இருந்தோம் என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்

image_pdfPRINT

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில்  தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்.

தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிசார் கடந்த 4 ஆம் திகதி கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனடிப்படையில் அவர்கள் மூவரும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சை எழுதுவதற்கு மன்று அனுமதி அளித்திருந்தது.

அந்நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சையில் தோற்றி வருகின்றனர்.

கலைஞர் கருணாநிதி காலமானார்

image_pdfPRINT

தமிழகத்தின் முன்னாள் முதலைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் தனது 95 ஆவது வயதில் இன்று (7) காலமானார்.

கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளார். மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என குறித்த மருத்துவமனை உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் மூத்த அரசியல் வாதியும் 5 தடவைகள் முதலமைச்சர் பதவியை வகித்தவருமான கருணாநிதியின் மறைவினை முன்னிட்டு அரசு நாளை விடுமுறை அறிவிப்பினை விடுத்துள்ள அதேவேளை அரசியல் வாதிகள் பிரமுகர்கள் பிரபலங்கள் என பல தரப்பட்டவர்களும் இரங்கல் செய்திகளை வெளிட்டு வருகின்றனர்.

 

ஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்

image_pdfPRINT

இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற, புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரான திலக் அன்றூஸின் கோரிக்கை தொடர்பில் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டுக்கு (Jeremy Hunt) நேரடியான கடிதம் ஒன்றை அனுப்பி அவரது பதிலை கோருவதாக, புட்னி- ரொஹம்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீனிங் தெரிவித்துள்ளார்.

ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரிய விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேணைக்கு (Early Day Motion) ஆதரவு வழங்கக்கோரி அன்றூஸினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேரணையில் (E.D.M)  பொது விதிகளுக்கு அமைவாக தான் கையொப்பமிடுவதில்லை எனவும் மறுத்துள்ளார்.

தவிர, பிரித்தானியாவிடம் ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளும் நாடுகள் கொள்வனவு செய்யும் ஆயுதங்களைக் கொண்டு உள்நாட்டில் மனித உரிமை மீறல் செயல்பாடுகள் மற்றும் அடக்கு முறைகளை மேற்கொள்வது கண்டறியப்பட்டால் அந்நாடுகளுடனானா ஒப்பந்தம் ஐ.நா. விதிகளுக்கு அமைவாக நிறுத்தப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

திலக் அன்றூஸ் கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீங்கை நேரில் சந்தித்து ஆயுதவிற்பனையை நிறுத்தும் கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொடிய யுத்தத்தின் பின்னரும் தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்கு பிரதான காரணியாக  ஆயுதகொள்வனவே காணப்படுகிறது.

எனவே, இலங்கைக்கான ஆயத விற்பனையை பிரித்தரினயா நிறுத்த வேண்மென கோரி பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் தமிழ் தவகல் நடுவத்துடன் இணைந்து முன்னெடுத்துவரும் செயற்பாட்டின் பயனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவியினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த விடயம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்திற்கான பிரேரணையில் (EDM) இதுவரையில் இதுவரையில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு

image_pdfPRINT

– மானிப்பாய் பொலிஸ் தகவல்

வாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சி பகுதியை சேர்ந்த 07 இளைஞர்களை மானிப்பாய் பொலிசார் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு எதிராக வாள் வெட்டு தொடர்பிலான வழக்குகள் , நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் , மேலும் ஒன்பது பேரை தாம் தேடி வருவதாகவும் மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,  கைது செய்யப்படவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிசாருக்கும் , கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது கண்டறிந்துள்ளோம்.

அதனடிப்டையில் இளைஞர்களின் கையடக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து விசரானைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்களையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் மானிப்பாய் பொலிசார் முற்படுத்தினார்கள்.

அதன் போது இளைஞர்கள் சார்பில் முன்னிலையான வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் “கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்தப்பட்டு உள்ளதாகவும் ,அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் பிணை விண்ணப்பம் செய்தார்.

குறித்த பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் ஏழு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து கைக்கோடரி , வாள்கள் , கை கிளிப் போன்றவற்றை மீட்டோம் என மானிப்பாய் பொலிசார் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்

image_pdfPRINT

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி,  இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் வந்து , பொலிசாருடன் மோதுண்டார்கள் என கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொக்குவில் பொற்பதி பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில் ,

கொக்குவில் பொற்பதி வீதியை சேர்ந்த ஏ.டெனிஸ்வரன் (வயது 19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவனான சுஜீவன் (வயது 16) ஆகிய இருவரும் வீட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி மறித்தனர்.

அதன் போது மோட்டார் சைக்கிளில் ஒட்டி சென்ற இளைஞன் நிலைதடுமாறி பொலிசாரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகினர்.

விபத்தினால் மோட்டார் சைக்கிளில் ஓடிய இளைஞன் காலில் காயமடைந்ததுடன் , பின்னால் இருந்து சென்ற மாணவனும் சிறு காயங்களுக்கு உள்ளானான்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் விபத்துக்கு உள்ளான இளைஞன் மற்றும் மாணவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

இருவரையும் நிலத்தில் விழுத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து தாக்குதல் நடாத்தினார்கள். அவ்வேளை அங்கு கூடிய நாம் இளைஞனையும் மாணவனையும் பொலிசாரின் தாக்குதலில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளோம்.

பொலிசாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் அவர்களின் முகம் மற்றும் கண் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் தெரிவிக்கையில் ,

யாழில். நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் திடீர் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அந்த வகையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்திற்கு அருகில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்நேரம் , தலைக்கவசம் இன்றி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மறிக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி,  மறித்த பொலிசார் மீது மோதி விபத்துக்கு உள்ளனார்கள்.

அதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் , அவர்களை மறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரான பண்டார மென்டிஸ் என்பவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்தனர்.

இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் எனும் குற்ற சாட்டை பொலிசார் மறுத்துள்ளனர்.

விளக்கமறியல் நீடிப்பு

image_pdfPRINT

யாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாக  ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றயவர் சிசிரிவி காணொலிப் பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

அதனை ஆராய்ந்த மன்று சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தது.

முன்னதாக, கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளுக்கு  புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

அத்துடன்,  வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே- 100) கிராம அலுவலகரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு  கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

நான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவருக்கும் எதிராக தலா 2 வழக்குகள் வீதம் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள் இருவரும்,  யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா? என அன்றைய தினம் மன்று கேள்வி எழுப்பியிருந்தது.

“சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சிசிரிவி கமரா பதிவை இன்று வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், இன்றுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்றைய முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலையே சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

image_pdfPRINT

திருகோணமலை உப்புவெளி காவல்நிலையப் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயது நிரம்பிய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது நிர்வாணப் புகைப்படத்தை காட்டி இந்த ஆண்டு 3 மார்ச் மாதத்தில் இருந்து தன்னை அந்த உத்தியோகத்தர் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக அச்சிறுமி காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரும் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமியும் அயல் வீடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

வாள்வெட்டு கும்பல் பயன்படுத்திய கார் பொலிஸாரால் மீட்பு; சந்தேகத்தில் ஒருவர் கைது

image_pdfPRINT

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது எனவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருசுவில் வடக்கு வீதியில் உள்ள தம்பு ஜெயானந்தம் என்பவரது வீட்டுக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு வாள்கள் பொல்லுகளுடன் பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் புகுந்து, வீட்டில் இருந்தவர்களையும் அயல் வீட்டில் வசித்தவர்களையும் சரமாரியாக தாக்கியது.

அப்போது அயலில் உள்ளவர்கள் கூக்குரல் இட்ட போது ,  கிராம மக்கள் திரட்டனர். அதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்  அவர்களை மக்கள் விரட்டிச்சென்றனர்.

இதன்போது கும்பலைச் சேர்ந்த சிலர்  பயணித்த காரினுடைய சக்கரம் ஒன்று காற்றுப்போனதனால் அதனைக் கைவிட்டுவிட்டு அதில் பயணித்தோர் தப்பிச்சென்றுவிட்டனர்.

கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.அதனை அடுத்து கார் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அந்தக் காரினுடைய உரிமையாளர் சாவகச்சேரி சரசாலை வடக்கைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டு உரிமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது, கார் வாடகைக்கு கொடுக்கப்பட்டதாக உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டது.அதனை அடுத்து வாடகைக்கு காரினை பெற்று சென்றவரை  இன்று வெள்ளிக்கிழமை கொடிகாமம் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

error: Content is protected !!