Home Blog Page 273

ஹெலியில் பரீட்சை நிலையம் வரும் வினாத்தாள்

image_pdfPRINT

நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

“வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக நெடுந்தீவுக் கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலை உள்ளது. அதனால் படகுப் போக்குவரத்துக்கு அசாதாரண நிலை காணப்படுகின்றது.

அதனடிப்படையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாணவர்களின் விடைத்தாள்கள் உலங்கு வானூர்தி ஊடாக எடுத்துவரப்பட்டன. அத்துடன், இன்று தொடக்கம் 3 நாள்கள் நடைபெறும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் உலங்கு வானூர்தி ஊடாக இன்று நெடுந்தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நெடுந்தீவு பரீட்சை நிலையத்தில் 33 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

ஜனாதிபதி மயிலிட்டி வருகை ; முன்னாள் போராளிகளின் விபரத்தை திரட்டும் புலனாய்வுபிரிவு!

image_pdfPRINT

மயிலிட்டித் துறைமுக விஸ்தரிப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள்  போராளிகள் விபரத்தை திரட்டுவதில் இராணுவ புலனாய்வுதுறை மற்றும் காவல்துறை மும்முரமாகியுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. இதற்காக காங்கேசன்துறை முதல் வளலாய் வரையான கரையோரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களினது தகவல்கள்  புலனாய்வாளர்கள்,காவல்துறையினால் விபரங்கள் திரட்டப்பட்டுவருகிறது.

இதில் புனர்வாழ்வு பெற்றவர்களின் விபரங்கள் தனியாக சேகரிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த 30 வருடங்களிற்க மேலாக படையினரிடமிருந்த மயிலிட்டி இறங்குதுறை அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தது.இதனை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரப்படுத்த அரசு முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிணற்றிலிருந்து தாய்,மகன் சடலமாக மீட்பு

image_pdfPRINT

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் நான்கே வயதான மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார். இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர்.  இதன்போது வீட்டில் இருந்த றொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் நிற்கும் போது நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன். அப்போது அவர்களை காணவில்லை.

சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் தாயாரை தேடி வந்தான். இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம் எனத்தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை இலங்கை காவல்துறை முன்னெடுத்து வருகின்றது.

தொடரும் இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள்

image_pdfPRINT

யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

நினைவிடம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் யாழ்.மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்நிலையில் நேற்றையதினம் மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா? “ , “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? “ என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர்.

அதனால் , வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ்.மாநகரசபை பூரணப்படுத்தியது.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் பெருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

image_pdfPRINT

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 09ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

500 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய சீனநாட்டுகப்பலை தேடி அகழ்வு

image_pdfPRINT

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில்  சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து , சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும்,  அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் கடந்த 1980ஆம் ஆண்டு கால பகுதியில் ஆரம்ப ஆய்வில் சீன நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

அதன்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்த்து.

இந்நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இரு நாட்டு  அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் ஒல்லாந்தர் கால கோட்டை மற்றும் அதற்கு முற்பட்ட கால துறைமுக சான்றுகளை மீட்கும் வகையிலும் இலங்கை தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்து உள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பருத்தித்துறை  துறைமுகம் புனரமைக்கப்படவுள்ள  நிலையில் அதற்கு முன்னதாக அங்கிருக்கும் வரலாற்று தொல்லியல் சான்றுகளை மீட்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது.

அத்துடன் குறித்த இரு ஆய்வு பணிகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை உத்தியோக பூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவா குழு இருவர் கைது

image_pdfPRINT

நீர்வேலி  பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் நேற்று (14) கைது செய்யப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில்  வைத்து மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.  நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள் வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியதுடன் ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துமிருந்தது.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதும், சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை. மேலும் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஐவரும் ஒரு மாத காலத்துக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் வேறு இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14)  கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

24 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

image_pdfPRINT

செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூறப்பட்டது.

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும்  மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முல்லையில் தமிழர்களின் மீன் வாடிகள் எரிப்பு

image_pdfPRINT

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் 8 வாடிகள் 3 படகுகள் , 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 12ம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் நேரில் வருகை தந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதுவரை குறித்த முறையினை தடை செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டதோடு பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது.

நான் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டேன் – சங்கக்கார

image_pdfPRINT

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என நான் நம்புகிறேன். பொதுச்சேவையில் பொறுப்புக்கூறல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, மரியாதை என்பவற்றுடன் பணியாற்ற வேண்டும்.

பொதுமக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பொது ஊழியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் எனது பிரதான நோக்கம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமேயாகும். அறக்கட்டளைகளுடன் இணைந்து பல்வேறு சேவைகளை ஆற்றுவதற்கு விரும்புகின்றேன்.

கிரிக்கட் துறையில் தொடர்ந்தும் ஏதோ ஓர் வகையில் சேவையாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் வீணை மீட்ட இராணுவ வீரர்; போர்க்களமாக மாறிய இராணுவவிடுதி

image_pdfPRINT

-மூவர் வைத்தியசாலையில்

இராணுவ வீரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட போத்தல் தாக்குதலில் மூன்று இராணுவ விரர்கள் காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தியத்தலாவை இராணுவ முகாமிலேயே மேற்படி சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இரவு நித்திரை வேளையில், இராணுவ சிப்பாயொருவர் வீணை வாசித்துக்கொண்டிருந்த போது, அதனை நிறுத்தும்படி பிறிதொரு இராணுவ சிப்பாய் கூறவே, அது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாகி, போத்தல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிறிதொரு இராணுவ சிப்பாய் இம் மோதலை தடுக்க முற்பட்ட போது மூவரும் காயங்களுக்குள்ளாகினரென்று ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

போத்தல் தாக்குதல்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயங்களுக்குள்ளாகினர்.

இச்சம்பவம் குறித்து தியத்தலாவை பொலிஸார் இராணுவ பொலிஸாருடன் இணைந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபடலாம்; புனரமைப்பு செய்யமுடியாது – பொலிஸ் அறிவுறுத்தல்

image_pdfPRINT

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள தடையில்லை என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்திற்கு அப்பகுதி மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்நிலையில் கடந்த 10ஆம் திகதி குறித்த ஆலயத்தை சேர்ந்தவர்களை நெடுங்கேணி பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து இருந்தனர்.

அதன் பிரகாரம் பொலிஸ் நிலையம் சென்ற ஆலய நிர்வாகத்தினரிடம் , அங்கு நின்ற தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் , குறித்த வெடுக்குநாறி மலை எமது தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டது எனவும் , அதனை சூழவுள்ள காட்டு பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆலய நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளனர். மீறி சென்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிசார் , அவ்விடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார்கள். அதன் போது ஆலய நிர்வாகத்தினர் மறுநாள் (11ஆம் திகதி ) ஆடி அமாவசை திதி ஆலயத்தில் விசேட பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே அன்று ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி இருந்தனர். அதற்கு தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் சம்மதித்தனர்.

அதன் பிரகாரம் ஆலயத்திற்கு சென்று அன்றைய தினம் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த ஆலயத்தின் நிர்வாகத்தினரை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு நெடுங்கேணி பொலிசார் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள தடையில்லை எனவும் , ஆலயம் மற்றும் அது அமைந்துள்ள மலை மற்றும் அதனை சூழவுள்ள காட்டு பகுதிகள் என்பன தொல்லியல் திணைக்களத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன.

எனவே ஆலயத்தில் ஏதேனும் மாற்றங்கள் , கட்டடங்கள் அமைத்தல் போன்ற ஏதேனும் செயற்பாடுகளை செய்வதாயின் அதற்கு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆலயத்திற்கு சென்று வருவதற்கோ , பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவோ எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!