SHARE

வீரகேசரியின் முன்னாள் நிருபர்- ப.சுகிர்தன்

இலங்கைத்தீவில் தமிழருக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தினால் நடத்தி முடிக்கப்பட்ட பாரிய இன அழிப்பு யுத்தம் நடைபெற்று 9 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் யுத்த வடுக்கள் அதன் இழப்புக்கள் இன்றுவரை ஆற்றப்படாத சாபம் நிறைந்த பூமியாக இலங்கை இருந்துவருகின்றது.

யுத்தக்குற்றத்திலிருந்து தப்பிக்க சர்வதேச விசாரணையிலிருந்து நழுவப்போராடும் இலங்கை அரசுக்கு உள்ளநாட்டில் உள்ள யுத்த எச்சங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் செய்யப்பட்டோர் எங்கே? உறவுகளின் கண்முன்னே இராணுவத்தினரால் வலிந்து கொண்டு செல்லப்பட்ட அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது இன்று வரை பதில் சொல்லப்படாத வினா நிறைந்த போராட்டமாகவே தொடர்கின்றது.

இந்நிலையிலேயே யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றான வடக்கின் மன்னாரில் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மனித எச்சங்கள் நிறைந்த பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை (சதொச) வளாகத்தில் கட்டட நிர்மாண பணிக்காக மண் அகழ்வு இடம்பெற்றபோதே அங்கு மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் என மனித எச்சங்கள் வெளிவரத்தொடங்கின. இதனையடுத்து குறித்த நிலத்தை முற்றாக அகழுமாறு நீதிமன்றம் உத்தரவிட சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மதிப்பறிக்கையை பெறும் பொருட்டில் அங்கு தொடர்ந்து தோண்டும் பணிகள் ஆரம்பமாகின.


கடந்த மே மாதம் முதல் நடைபெறும் தொடர் அகழ்வில் இதுவரையில் 120 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்ல புதைகுழி விவகாரம் விஷ்பரூபம் எடுத்துள்ளது.
அந்தவகையில் யுத்தத்தின் பின்னர் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆவது மிகப்பெரிய மனித புதைகுழியாக இது காணப்படுகின்றது. முன்னர் திருக்கேதிஸ்வரத்தில் தோண்டப்பட்ட மனித புதைகுழியில் 94 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. கடந்த 2014 ஆம் ஆண்டு அவை மீட்கப்பட்ட போதிலும் இன்னும் அவை குறித்து தெளிவான முடிவுகள் வெளிவரவில்லை. இது ஒரு புறம் பெரும் சந்தேகத்தினை இன்றுவரையில் ஏற்படுத்தி நிற்கின்றது.

தொலைந்த தம்வர்களின் புகைப்படங்களை கைளில் ஏந்திய படி உறவுகள் கண்ணீருடன் இரவு-பகலாக வீதி ஓரமாக கத்திருப்புஇ நாளாந்த போராட்டம் என தமிழரின் அவலங்கள் தொடரும் நிலையில் தோண்டப்படும் இம் மனித புதைகுழி குறிப்பாக தமிழர் தரப்பில் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது அகழப்பட்டு வரும் குறித்த வளாகத்திலிருந்து இருவேறு பகுதிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் வளாகத்தின் மையப்பகுதியில் எந்தவித குழப்பங்களுமின்றி ஒழுங்காக புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்களும் வளாகத்தின் நுழைவுப்பகுதியில் அவசர அவசரமாக ஒன்றுடன் ஒன்று நெருக்கமான முறையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களும் மீட்கபட்டதாக குறித்த அகழ்வுக் குழு நிபுணர் தலைவர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதுவரையில் மீட்கப்பட்ட மனித வன்கூடுகளில்; 6 சிறுவர்களுடையது என தெரிவித்துள்ளதுடன் இன்னும் அகழவேண்டிய பகுதிகள் மீதம் உள்ளதால் மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மீட்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காண உதவும் வகையில் ஆடைகளோ வேறு பொருட்களோ புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்படவில்லை. அவ்வாறாயின் இதன் மர்மம் என்ன? இது மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் புதைக்கபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது.

தவிரஇ அங்கு உடல்கள் காணப்படும் விதம் குறித்து அகழ்வில் ஈடுபடும் நிபுணர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். புதைகுழியினுள் இரண்டு அடுக்குகளில் எலும்புக்கூடுகள் காணப்படுகிறது. ஆவற்றில் சில எலும்புகள் முறிவடைந்த நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அகழ்வின் 43 ஆவது நாளின் போது மனதை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்றும் நிகழ்தேறியுள்ளது. அகழ்வு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு முதிர்ந்த மனித வன்;கூடும் அதன் அருகே சிறிய வன்கூடுகளைக்கொண்ட மனித எச்சங்களையும் நிபுணர்கள் கண்டனர். இதனையடுத்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்ணை அகற்றிய போது தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கும் வகையில் அங்கு ஒன்றையொன்று அணைந்த படி எலும்புக்கூடுகள் காணப்பட்டன. அதேபோல் தலையில் வெட்டுத்தளும்புடன் கூடிய மண்டையோடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஓவ்வொரு நாள் அகழ்வுப்பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்படுவதினால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை முடிப்பதில் கூட தாமதம் காணப்படுவதாக அகழ்வுப்பணியில் ஈடுபட்டுவரும் குழுவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு தோண்டதோண்ட நாளுக்கு நாள் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நிகழ்தபடி இருக்க சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

காணமல் போன உறவுகள் விடயத்தில் சர்வதேசத்தின் முன்னிலையில் பதில் சொல்ல முடியாது அதிலிருந்து நழுவ உள்ளக விசாரணை மட்டுமே போதும் என்று கூறியதுடன் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை (OMP) திறந்து அதில் தனக்குரியவர்களை பணிக்கு அமர்த்தி சர்வதேசத்திற்கு வெளிநாடகம் போட்டுவரும் இலங்கை அரசுக்கு இந்த புதை குழி விவகாரம் பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

ஆனால் வழமை போல் அதனை மூடிமறைக்கும் வேலைகளை மிகக் கச்சிதமாக நகர்த்தி வருகின்றது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

புதை குழி விவகாரத்தை அப்படியே மூடிவிட முனைப்பெடுக்கும் அரசு ஊடகங்களின் வாய்களை முதலில் மூட களமிறங்கிவிட்டது. குறித்த புதை குழியின் அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஊடகங்களிடையே கருத்து தெரிவிப்பதற்கு அங்கு பணிபுரியும் நிபுணர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வாராய்சிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீதித்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சமிந்த ராஜபக்ஷவும் அகழ்வின் நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் ஊடகங்களுக்கு அகழ்வு பணிகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையிலேயே, பின்னர் ஊடகங்களிற்கு கருத்துக்கள் தெரிவிக்க விதிமுறைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார் நீதவான் டி.சரவணராஜ் தற்போது நீதிமன்ற பதிவாளரை உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமித்துள்ளார்.

நீதிபதி தினசரி பதிவாளருக்கு வழங்கப்படும் அறிக்கையைப்பெறுவார். பத்திரிகையாளர்கள் பதிவாளரிடம் இருந்து தகவலைப் பெற வேண்டும்.
இவ்வாறு ஊடகங்களிற்கு வேலிகளை போட்டுள்ள அரசு ஒட்டுமொத்தமாக குறித்த புதைகுழியையும் நாட்டு மக்களிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்து மறைத்துவிட வேலியை போட்டு வருகிறது.

நல்லாட்சி அரசு என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மைத்திரி தலைமையிலான அரசு குறித்த விவகாரத்தை வெளிப்படையாக கையாழ்வதில் ஏன் தயக்கம் காட்டுகிறது. நெருப்பு இல்லாமல் ழரு போதும் புகை வராது என்பார்கள்.
யுத்த வெற்றியை பெற்றுத்தந்த தமது இராணுவ வீரர்களை ஒருபோது குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்போவதில்லை என உறுதிப்பாட்டு நிலையை கொண்டுள்ள அரசு அவர்களை காப்பாற்றவே இந்த புதை குழி விவகாரத்தையும் மூடி மறைக்க முயன்றுவருகிறது.

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி நிலை அடைந்து இறுதி யுத்த ஆரம்பிக்கப்பட்ட வேளையில் குறித்த புதைகுழி உள்ள மன்னார் பகுதி இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது.  எனவே இந்த புதை குழி மர்மம் தொடர்பில் அப்போதைய இராணுவத்தளபதி தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா அறிந்திராமல் இருப்பதற்கு வாய்பில்லை என்றே சொல்லவேண்டும்.

இதனிடையே இறுதி யுத்த ஆரம்ப கட்டங்களில் காயப்பட்டவர்கள் பலர் கொழும்பில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு கொழும்பிற்கு தொடர்ந்து காயப்பட்டவர்கள் அனுப்பப்படும் போது தென்பகுதி மக்களிடையே ஒரு குழப்பநிலை ஏற்படும் என்பதோடு வடக்கில் பெரும் யுத்தம் நடைபெறுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

எனவே தென்பகுதி குழப்பமடைவதை தவர்த்துகொள்ள கொழும்புக்கு அனுப்பப்படும் காயப்பட்டவர்களை இடைநடுவே இராணுவம் மன்னாரில் மறித்த தாக தகவல்கள் அப்போ வெளியாகி இருந்தன. இதனால் இந்த புதை குழிக்கும் குறித்த சம்பவத்திற்கும் தொடர்புகள் இருக்குமா என்ற சந்தேகக்கோணங்கள் குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்திருந்தவர்களிடம் எழுந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறலை நிகழ்த்திய இலங்கை இராணுவம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அப்பட்டமாக மறுத்து வரும் நிலையில் வழமை போல் இப்புதை குழி விவகராத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என முந்தியடித்துகொண்டு தெரிவித்துவிட்டார்கள்.

புதைகுழயில் காணப்படும் உடல்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் நிச்சயமாக இந்த புதைகுழிக்கும் படையினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை எவரும் அந்தக்குற்றச்சாட்டுக்களை சுமத்தவுமில்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் அத்தப்பத்து.

இதனிடையே மறுபக்கத்தில் மன்னாரில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் இந்தியாவுக்கு படகுகளில் தப்பிச்செல்ல முயன்ற பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டை மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர் விக்டர் சூசை முன்வைத்துள்ளார். குறித்த புதைகுழிவிவகாரம் தொடர்பில் பிரபல செய்தி சேவைக்கே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அகழ்வு நடவடிக்கைகளின் ஆரம்ப நாட்களில் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாக அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர் புதைகுழியினுள் புதைக்கப்பட்டவர்கள் யார் எவர் என்பதை நிச்சயம் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டது.

இவ்வாறு பல சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ள இந்த மன்னார் புதை குழி விவிகாரம் வெளிப்படையாக இறுதிக்கட்ட அறிக்கை வரை இடம் பெறுதல் அவசியம்.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்த போதிலும் தொலைந்த தம் உறுவுகளை இன்றுவரை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இப்புதைகுழி விவவாரம் மேலும் ஒரு பயத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.

எனவே அவர்களின் மனதில் மேலும் ஒரு அழுத்தமாக எழுந்துள்ள இந்த விவகாரத்தை வெளிப்படையாக கையாண்டு குறித்த வன்கூடுகள் தொடர்பில் உண்மை அறிக்கை வெளியிடப்படவேண்டும். இது அவர்களின் மனிதில் ஏழுந்துள்ள மேலான ஒரு அழுத்தத்தை நீக்க வழிவகுக்கும்.

இந்நிலையில் காணமால் போனாருக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க உழைப்பதாக சொல்லிக்கொள்ளும் காணாமல் போனோருக்கான அலுவலகம் வெறுமனே இப்பணிக்கான நிதி உதவியை மட்டும் செய்து விட்டு நழுவல் போக்கை கையாழாது புதை குழி விவிகாரத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இறுதியாக இலங்கை அரசாங்கம் தனது கடந்த காலங்களை உரிய விதத்தில் அணுக விரும்பினால் மனித புதைகுழிகளை வெளிப்படையாக விசாரணை செய்வதன் மூலம் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு நேர்மையான தீர்வை காண முயலவேண்டும்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு உரிய நடவடிக்கைகளையும் எடுக்காத அரசு இப்புதைகுழியையும் அப்படியே புதைத்துவிடுமா என்தே எமது பெரும் கேள்வியாக உள்ளது.

Print Friendly, PDF & Email