SHARE
இரணைதீவில் மீள்க்குடியேறச்சென்றுள்ள மக்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல சர்வதேச சட்டங்களில் உரித்து உண்டு. அந்த அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டுமென்றும்  கோருகின்றோம். ஏனெனில் அவ்வாறு கொடுப்பதாக இலங்கை அரசும் ஜெனிவாவில் உத்தரவாதம் அளித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
படையினரால் விடுவிக்கப்படாத தமது பூர்வீக நிலமான இரணைதீவுக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கொடியுடன் சென்று அங்கேயே தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்திருந்தனர்.
இந்நிலையிலேயே, அங்கு செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்த பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறல்லாது வடமாகாணத்தில் பெருமளவான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறே இரணைதீவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என கூறியுள்ளனர். ஆனால் இங்கு 3 ஏக்கர் அளவிலான காணியில் மாத்திரமே இராணுவத்தினர் உள்ளனர். மிகுதி காணிகள் வெறுமையாகவே உள்ளன. எனவே அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கலாம்.
ஆனால் அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே உள்ளது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அரசியல் ரீதியான முடிவுகளையே எடுப்பார்கள். எம்மிடமுள்ள அதிகாரங்களை கொண்டு இவற்றை விடுவிக்க முடியாது. எனவே நாம் காணி தொடர்பான ஆவணங்களை தயார் செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.
மேலும், இங்கு குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். விரைவில் இங்கு நிலவும் குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம் என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email