SHARE

– ஐரோப்பிய நீதிமன்றில் தமிழ் சட்டத்தரணிகளின் பெருவெற்றி

ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், “சகாயகர பாதுகாப்பு” (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிட அனுமதியை பெற்றுக்கொள்ள இயலும் என கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) தீர்ப்பளித்துள்ளது.

சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் ஆகியயோரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட ஒரு ஈழத்தமிழர் தொடர்பிலான வழக்கிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

அதாவது, மனித உரிமைச் சட்ட விதியின் கீழ் ஐரோப்பாவில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர் கடந்தகாலத்தில் அனுபவித்த சித்திரவதைகளின் விளைவாக தமது உடல் அல்லது உளவியல் சார்ந்த கடுமையான பாதிப்புகளை கொண்டிருந்து அவர் சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் கொலை அச்சுறுத்தல் போன்ற தீங்குகள் இல்லாவிடினும் போதிய சிகிச்சையின்றி மிகமோசமாக பாதிக்கப்பட நேரிடும் அல்லது தற்கொலை செய்துகொள்ள நேரும் எனக்கண்டால் சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிடம் வழங்க ஐரோப்பிய நீதிமன்றம் அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.

எனினும் அவரது சொந்த நாட்டில் அவ்வாறான மருத்துவ உதவி கிடைக்கப்பெறாது என்பதை ஆராய்ந்து உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதும் புகலிடம் வழங்குவதும் சம்மந்தப்பட்ட ஐரோப்பிய உறுப்புநாட்டின் நீதிமன்றங்களை சார்ந்தது என அத்தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் பின்னணி

இந்த வழக்கின் விண்ணப்பதாரி தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருந்த காரணத்தினால் இலங்கை பாதுகாப்பு படையினரால் முன்பு சித்திரவதைக்கு உட்பட்டிருந்த ஒரு ஈழத்தழிழராவார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாமல் “எம்.பி” (MP) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள  இவர் கடந்த 2005 இல் ஒரு மாணவராக பிரித்தானியாவை வந்தடைந்தார். எனினும் இலங்கையில் உயிர் ஆபத்து காரணமாக திரும்பிச்செல்ல முடியாத காரணத்தால் 2009 இல் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.

அவர் தான் இலங்கையில் அனுபவித்த சித்திரவதையின் விளைவாக மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு நோய்க்கு (Post-traumatic Stress Disorder and Depression) உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் “எம்.பி” இன் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டபோதிலும், சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் அவர்களின் கடும் உழைப்பால் அவரது வழக்கு ஒரு உதாரண வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, இலங்கைக்கான அரசியல் தஞ்ச வழிகாட்டி வழக்குகளில் (Country Guidance) ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல மேல்முறையீடுகளினால் இவ்வழக்கு பிரித்தானிய உச்சநீதிமன்றம் வரை சென்றது.

அவர் போன்று, சித்திரவதை காரணமாக மனநிலை பாதிப்பு அடைந்தவர்களுக்கு புகலிடம் வழங்குவதற்காக புதிய நடைமுறை ஒன்றை பிரித்தானிய அரசு உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை அவரது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த பிரித்தானிய உச்சநீதிமன்றம், சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என அறியப்படும் மூன்றாம் உலகநாட்டைச்சேரந்த பிரஜைகள் அல்லது நாடற்றவர்களுக்கான குறைந்தபட்ச நியமங்களை அளிக்கும் ஐரோப்பாவின் 2004 ஆம் ஆண்டு பணிப்புகளின் அடங்கல்கள் குறித்து விதிக்குமாறு லக்ஸம்பேர்க் (Luxemburg) இனை தளமாக கொண்ட ஐரோப்பிய நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

அதன் பிரகாரம், ஐரோப்பிய நீதிமன்றத்தில் அருண் கணநாதன் தலைமையிலான சட்டத்தணிகள் குழு ஒன்று இது தொடர்பான வழக்கை வெற்றிகரமாக வாதிட்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்ப்பை வெளியிட்ட ஐரோப்பிய நீதிமன்றம், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டாலும் சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்ற பாதுகாப்பை பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியிருந்தனர். இந்த குறிப்பிட்ட இலங்கையரின் வழக்கில் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினால் அங்கு போதிய சிசிச்யையின்மையினால் அவரது உடல்நலத்திற்கு தீங்கு நிகழுமா என்பது குறித்து தீர்மாணிக்க வேண்டியது பிரித்தானிய நீதியரசரே எனவும் தெரிவித்துள்ளது.

சகாயகர பாதுகாப்பு (Subsidiary Protection)

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டின் ஐரோப்பிய பணிப்புகளின்படி, சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்னும் புகலிடம், அகதி அந்தஸ்து பெற தகுதி பெற்றிருக்காத மூன்றாம் உலகநாட்டின் ஒரு பிரஜை அல்லது நாடற்ற ஒருவருக்கு பொருந்துமெனினும் அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு மரண தண்டனை அல்லது உயிர் பறிப்பு, சித்திரவதை அல்லது கடும் அச்சுறுத்தல் போன்ற மிகக் கடுமையான தீங்கினை அனுபவிக்கும் வகையலான கடும் ஆபத்துக்களுக்கு நிரந்தரமாக முகம் கொடுக்க நேரிடும் என்ற நிலையில் உள்ளவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றிருந்தது. தற்போது சர்வதேச மனித உரிமை விதிமுறை சார்ந்த மருத்துவ சிகிச்சை என்னும் விடயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அட்வொகேட் ஜெனரல் வெஸ் போட் அவர்களின் கருத்து

ஐரோப்பிய நீதிமன்றத்தின் 11 அட்வொகேட் ஜெனரல்களில் ஒருவரான வெஸ் போட், (Yves Bot) இந்நபர் நாடு திரும்பினால் தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடியவராகவும் தன்னைத்தானே அழித்துக்கொள்ள தீர்மாணித்துள்ளவராகவும் தென்படுகிறார் என தனது கருத்தினை எழுதி சமர்ப்பித்திருந்தார்.

சித்திரவதைகளை மேற்கொண்டு வருகிறது என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு நாடாக விளங்கும் இலங்கை, 1984 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான சர்வதேச விதிமுறையின் கீழ் தஞ்சம் கோரியவருக்கு அல்லது அவர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு புனர்வாழ்வும் நட்டஈடும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இலங்கையின் போதிய மருத்துவ வசதியின்மை குறித்து வாதிடப்படவில்லை. நாடு திரும்பினால் ஐரோப்பிய மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாக இவருக்கு ஏற்பட்டுள்ள மனநல பாதிப்புகளிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவாரா என்பதனை குறித்த ஐரோப்பிய உறுப்பு நாட்டின் தேசிய நீதிமன்றமே தீர்மாணிக்க வேண்டும் என அட்வொகேட் ஜெனரல் போட் தெரிவித்தார்.

இது முன்னர் விதிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து உருவான ஒரு சட்ட விதி (Established Case-Law) என்றும் ஐரோப்பியச் சட்டமானது மனித உரிமை சார்ந்த சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான முறையில் இயங்கவல்லது எனவும் குறிப்பிடும் அதேவேளை சர்வதேச சட்டமும் 2004 ஆம் ஆண்டின் ஐரோப்பிய பணிப்புகளும் வேறு இலக்குகளை கொண்டிருப்பதுடன் முற்றிலும் வித்தியாசமான பாதுகாப்பு பொறிமுறைகளை அமைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி கீத் குலசேகரம் அவர்களின் கருத்து

இந்த வழக்கின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த சட்டத்தரணிகளில் ஒருவரான திரு கீத் குலசேகரம் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

“இந்த தீர்ப்பானது உலகின் எந்த நாட்டில் இருந்து ஐரோப்பாவிற்கு வந்து தஞ்சம் கோரும் அனைத்து இன மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருப்பினும் குறிப்பாக இலங்கைத் தழிழ் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு பெரும் ஆறுதலை தருவதாக உள்ளது. வதைமுகாம்களில் சித்திரவதைகளுக்குள்ளாகி அங்கிருந்து தப்பிப்பிழைத்த தமிழர்கள் மேற்கு நாடுகளில் அகதி தஞ்சம் கோரி வருகின்றனர். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக பலரின் கோரிக்கைகள் நிராகரிக்கபட்ட நிலையில் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படும் நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களில் பலர் கடுமையான உடல் மற்றும் உள நல பாதிப்புக்களை அனுபவித்து வருகிறார்கள். அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் மறைந்து வாழும் நிராகரிக்கபட்ட அகதிக் கோரிக்கையாளர்கள் இந்த அடிப்படையில் மீண்டும் புதிய விண்ணப்பங்களை (Fresh Claim) மேற்கொண்டு இந்த வகையிலான புகலிடத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு இந்த தீர்ப்பு புதிய பாதையை திறந்து விட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனால் ஐரோப்பிய நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அங்கு புகலிடம் கோரிவரும் இலங்கை அரசின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் மனநிறைவையும் நிம்மதியையும் தந்திருக்கிறது.  தமிழ் மக்கள் மட்டுமன்றி சித்திரவதைக்கு உள்ளான உலகின் அனைத்து இன தஞ்ச கோரிக்கையாளர்களும் நன்மை பெறும் வகையில் இந்த வழக்கை வெற்றிகரமாக நடாத்திய சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான  அருண் கணநாதன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் எனவும் அவரின் இந்த வெற்றி தமிழ் இனத்திற்கே பெருமை சேர்க்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிக தகவலுக்கு:

http://curia.europa.eu/juris/document/document.jsf?text=&docid=201403&pageIndex=0&doclang=EN&mode=req&dir=&occ=first&part=1&cid=358836

 

Print Friendly, PDF & Email