– பிரபல சட்டவல்லுனர் அருண் கணநாதன் –
தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையென்பது முற்றுமுழுதான தவறான கருத்தாகும். தமிழீழ தேசியக்கொடியென்பது விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியல்ல. அது தமிழீழ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியாகும் என சட்ட வல்லுனராகிய திரு அருண் கணநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ் தகவல் நடுவம் ஒழுங்குபடுத்தியிருந்த கலந்துரையாடலொன்றில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் இதனைத்; தெரிவித்திருந்தார். தற்போது பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் தமிழ் இனவழிப்பு தின முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளில், மக்கள் ஆணைக்கு மாறாக, தேசிய கொடியை ஏற்ற மறுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை, அதற்கான காரணமாக பிரித்தானியாவில் தேசியக் கொடி தடை செய்யப்பட்டுள்ளது என மக்களுக்கு தவறான தகவலை பரப்பிவருகின்றனர். இது உண்மை அல்ல என்ற போதிலும், பல அப்பாவி மக்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட சட்ட சட்டத்துறையில் வல்லுனராகிய இவரது உரையை இங்கே நினைவுபடுத்துவது சாலப் பொருத்தமானதாகும்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தமிழீழ தேசியக்கொடி மட்டுமன்றி, விடுதலைப்புலிகளின் கொடி கூட பிரித்தானிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. கோடி தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தப்பான வார்த்தைப்பிரயோகம் ஆகும். இதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் அமைப்பு தடைசெய்யப்பட்டிருப்பதால், அந்த அமைப்பு தொடர்பான அடையாளங்களை பாவிப்பது தவறு என சம்மத்தப்பட்ட சட்டத்தின் சரத்து தெரிவிக்கின்றது. எனவே விடுதலைப்புலிகளுக்குரிய சின்னங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இருந்தும் விடுதலைப்புலிகளின் கொடியை பிடிப்பவர்கள் மீது கூட வழக்குத் தாக்கல் செய்வதில் அரச தரப்பு பல சட்டச் சிக்கல்களை எதிர்நோக்குவார்கள். இவற்றை மீறி, ஒருவரை குற்றவாளியான நிரூபித்து, சிறைத்தண்டனை வழங்குவது என்பது மிகவும் கடினமான விடயம்.
தமிழீழத்தின் தேசியக்கொடிக்கு எந்த வகையிலும் தடை விதிக்க முடியாது. அதனை ஏற்றுவதால் எந்த பிரச்சனையும் வர முடியாது. தமிழீழம் என்பதும் விடுதலைப்புலிகள் என்பதும் ஒன்றல்ல. தமிழீழ கோரிக்கை விடுதலைப்புலிகளுக்கு முன்னரே உருவாக்கபட்டது. இது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் உருவானது. விடுதலைப்புலிகள் பின்னர் இதை முன்னெடுத்து சென்றார்களே தவிர, அவர்களும் தமிழீழமும் ஒன்றல்ல. தேசியக்கொடிக்கும் விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பிருந்தாலும் அது விடுதலைப்புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவது அல்ல. அதனால் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்கள் ஆணை பெற்ற, தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவதால் எனவும் கைது செய்யப்படலாம் என்பது சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்தார்.
மேலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் நிச்சயமாக தடை எதுவும் இல்லை. இந்த கொடியை ஏற்றுவது சட்டவிரோதமென்பது முற்றும்முழுதாக தவறான கூற்றாகும் என அவர் மேலும் எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில், சிலர் இன்னும்; தமிழீழத் தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடை உள்ளது என்ற மாயையை பரப்பி, பொது நிகழ்வுகளில் தேசிய கொடியை புறக்கணிக்க முயல்வது, முற்றுமுழுதாக அவர்களின் சுயநல நடவடிக்கைகளின்பாற்பட்டது என்று நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
திரு அருண் கணநாதன் ஒரு மூத்த சட்டதரணி மட்டுமன்றி, வழக்குரைஞருமாவார். பிரித்தானியாவில் தமிழர்களின் பல்வேறு முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாக நடாத்தி பிரித்தானியாவின் குடிவரவு சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய பிரபல சட்ட வல்லுனர். இவரின் அயராத உழைப்பில் உருவான ஜி.ஜே (GJ and Others (post-civil war: returnees) Sri Lanka CG [2013] UKUT 00319 (IAC) என்றழைக்கப்படும் இலங்கைக்கான நெறிப்படுத்தல் வழக்கின் பிரகாரமே பல ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுவருகின்றார்கள். அண்மையில் இலங்கை தமிழ் அகதிகள் தமக்கு தாமே காயம் போட்டுக்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குடிவரவு தீர்ப்பாயம்; உருவாக்கிய விதிமுறையை KV (Sri Lanka v SSHD) எதிர்த்து மேன் முறையீட்டு நீதிமன்றில் பெருவெற்றி பெற்று, அந்த விதிமுறையை நிர்மூலம் செய்து, இலங்கை அகதிகள் மீதான பெரும்பழியை துடைத்தவர். இது மட்முமன்றி அண்மையில் UB (Sri Lanka) v SSHD என்ற வழக்கின் மூலம் மேன் முறையீட்டு நீதிமன்றில், பிரித்தானிய உள்விவகார அமைச்சு தமது சொந்த அறிக்கைகளில் உள்ள அகதிகளுக்கு சாதகமான தகவல்களை வழக்குகளில் சமர்ப்பிக்க தவறுவது சட்ட ரீதியான பிழை என்பதை நிறுவி, நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்பாட்டாளர்களின் நிராகரிக்கப்பட்ட அகதித் தஞ்சக் கோரிக்கைகளை மீளாய்வு செய்யும் வழி வகுத்தவர்.
இவர் ஒரு சட்டத்தரணி மட்டுமன்றி, ஒரு தமிழ் தேசியவாதியுமாவார். பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இதர புலம் பெயர் அமைப்புக்களின் உருவாக்கத்தில் பெரும் பங்களித்த இவர், ஆரம்ப காலங்களில் புலம் பெயர் தமிழ் மக்களின் பேச்சாளராக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவாத்தைகளை நடாத்தி, தற்போதைய தலைமைகளுக்கு வழிகாட்டிய முன்னோடி அரசியல் செயற்பாட்டாளருமாவர்.