லண்டனை தளமாக கொண்டு இயங்கும் இரு அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பில், முன்னாள் போராளிகளின் அலவ நிலைபற்றி தகவல் சேகரிக்கும் ஆய்வுப்பணிக்காக இலங்கை வந்திருந்த, தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை, 22 மே 2016) முதல் காணாமல் போயுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட, திரு. றேமியன் றூப ராஜன் என்ற 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் பொலிசாரிடமும் மனித உரிமைகள் குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
டுபாய் நாட்டு நிரந்தர வதிவிட உரிமை கொண்ட இவர், ஒரு பொறியியலாளர் மட்டுமன்றி, டுபாயின் ‘கரவான்’ தொழினுட்ப நிறுவனத்தின் உதவி முகாமையாளராகவும் பணியாற்றுபவர். அதே நேரம் மனித உரிமை ஆர்வலராகவும் செயற்பட்டு வரும் இவரை, லண்டனை தளமாக கொண்ட தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச சட்ட மையம் (ICPPG) ஆகிய நிறுவனங்கள் தமது ஆய்வுப்பணிக்காக, இலங்கை அனுப்பியிருந்தார்கள். இந்த பணி நிமித்தம் இவர் மட்டக்களப்பு ஆயர், உள்ளுர் மனித உரிமை ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னார் போராளிகள் என பலரை சந்தித்திருந்தார்.
செவ்வாய் கிழமை, 23 மே 2016 அன்று டுபாய் திரும்பும் திட்டத்துடன், மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட இவர், வழியில் காணாமல் போயுள்ளார். பல வழிகளிலும் தேடி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இவரது குடும்பத்தினர் பொலிசாரிடமும்,
மனித உரிமைகள் குழு மற்றும் UNICEF ஆகிய அமைப்புகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 02 ஏப்பிரல் 2016 முதல் புத்திரசிகாமணி புஸ்பதரன் என்ற இன்னுமோர் மனித உரிமை ஆர்வலரும் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மனித உரிமைகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.