SHARE

வடபகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவியுமான சாந்தா அபிமன்ன சிங்கம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக தெரிவுக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பிலும், அக்கூட்டத் தொடரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் அதிருப்தியடைந்ததையிட்டு யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற அவசர சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் இப்பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கவுள்ளதாகவும், இப்பணிப்புறக்கணிப்பில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறியத்தந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Print Friendly, PDF & Email