ஐ.நா பொதுச்சபையின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்றை நியுயோர்க் அனுப்பவுள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு அங்கமாக மூன்றாவது குழுக்கூட்டம் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.
இதில் சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தை வரைவதற்கும், அதற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் பிரித்தானியாவைச் சேர்ந்த குழுவொன்று ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது.
இந்தக்குழு சக்திவாய்ந்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு கோரியுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானம் வரும் ஒக்ரோபர் 10ம் நாள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவு தேடுவது மற்றும் தீர்மானத்தை முறியடிப்பதற்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவருடன் முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிசும் நியுயோர்க் செல்லவுள்ளார்.