SHARE
image_pdfPRINT

 – தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்க திட்டம் முன்மொழிவு –

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் தமது வாக்குகளால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகளாக உள்ளனர். அதனால் பிரித்தானிய அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் தமிழர்களின் உதவியை நாடுவது வழமை. அந்தவகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் இளையோர் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஆதரவளித்துவருகின்றனர்.

இந்தவகையில், பிரித்தானியாவின் பழமைவாத (Conservative) கட்சியின் குரோய்டன் (Croydon) தொகுதிக்கான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஜேசன் பெர்ரி (Mayor Jason Perry) அவர்களின் பிரச்சாரப் பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியாக ஏற்றுக் கொண்டு நீதி வழங்க வேண்டும், இனப்படுகொலை நினைவு தூபி நிறுவ ஆதரவு தரவேண்டும், யுத்தக் குற்றவாளிகளான இலங்கை இராணுவ தளபதிகள் மீது பிரித்தானியா தடை விதிக்கவேண்டும், தமிமீழ தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே Conservative கட்சிக்கு  ஆதரவு வழங்க தமிழர்கள் முன்வந்துள்ளனர்.

பிரித்தானிய பழமைவாதி கட்சிக்கான தமிழர்கள் (British Tamils Conservative – BTC) அமைப்பின் ஏற்பாட்டில்  சனிக்கிழமை (25) இடம்பெற்ற இந்த அரசியல் பணியை இளம் அரசியல் செயற்பாட்டாளரான  யேசுராஜ்  மரியான் தலைமையில் பிரமதேவன் டெனுசன், கபில்ராஜ் சிவனேஸ்வரன்,ஹரிகரன் பாலு, ஜோர்ச் கமில்டன் யூடிட் பரோசன், அமல்ராஜ் ஜெயக்குமார், மார்க்கண்டு விதுஷன், பிரதீபன் புஷ்பராஜா, நிலுக்‌ஷன் கந்தசாமி, ஜீவாகரன் கருணாநந்தம், ஹரிஹரன் சாந்தகுமார், அனுசன் பாலசுப்பிரமணியம், சிறிகுணராசா வினோதன், அபினாஷ் டிலீபன் ஆகிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அந்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர், உள்ளூராட்சி தலைவர்கள் மற்றும் மக்களை வீடுவீடாக சென்று சந்தித்ததுடன் இலங்கையில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றியும் எடுத்து உரைத்தனர்.