– தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்க உதவ வேண்டும் என்று நிபந்தனை –
பிரித்தானியாவில் முக்கியமான தேர்தல்களாக காணப்படும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் தமது வாக்குகளால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகளாக மாறியுள்ளனர். அதன் அடிப்படையில் பிரித்தானிய அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் தமிழர்களின் உதவியை நாடுவது வழமையாகியுள்ளது. அந்தவகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும், தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் இளைஞர்கள் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஆதரவளித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரித்தானியாவில் மிக முக்கியமான அரசியற் கட்சியாக காணப்படும் தொழிற் (Labour) கட்சியின் மிச்சம் (Mitcham) மோடன் (Morden) தொகுதிக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சீமாட்டி சியோபைன் மெக்டொனால்ட் (Dame Siobhain McDonagh MP) அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிக்காக பெருந்திரளான தமிழ் இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியாக ஏற்றுக் கொண்டு நீதி வழங்க வேண்டும், இனப்படுகொலை நினைவு தூபி நிறுவ ஆதரவு தரவேண்டும், யுத்தக் குற்றவாளிகளான இலங்கை இராணுவ தளபதிகள் மீது பிரித்தானியா தடை விதிக்கவேண்டும், தமிழீழ தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தொழிற் கட்சிக்கு ஆதரவு வழங்க தமிழர்கள் முன்வந்துள்ளனர்.
பிரித்தானிய தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற இந்த அரசியல் பணியை இளம் அரசியல் செயற்பாட்டாளரான யேசுராஜ் மரியான் தலைமையில் கபில்ராஜ் சிவனேஸ்வரன், பிரமதேவன் டெனுசன், ஹரிகரன் பாலு, ஜோர்ச் கமில்டன் யூடிட் பரோசன், அமல்ராஜ் ஜெயக்குமார், மார்க்கண்டு விதுஷன், அனுசன் பாலசுப்பிரமணியம், லாவண்சன் சிவகுமார், லக்ஷனா சிவகுமார், பிரதீபன் புஷ்பராஜா, பங்கஜன் சிவனந்தராசா, நிலுக்ஷன் கந்தசாமி, அன்ரனி பெர்னாண்டோ அனுசன், ரவீந்திரன் நிவாஸ், ஆகிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






