Dilaksan Manorajan
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் மார்கழி 15 2024 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் விம்பிள்டன் பிரதேசத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த வணக்க நிகழ்வில் பெருந்திரளான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு ஈழத் தமிழர் வாழ்வில் என்றும் நீங்காத நினைவாக இருக்கும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான வணக்கத்தை செலுத்தினர்.
நிகழ்வின் பொதுச்சுடரினை நீண்ட நாள் தேசிய செயற்பாட்டாளர் திரு துரைராஜா யோகேஸ்வரன் ஏற்றி வைத்தார், தமிழ் தேசியக் கொடியினை கேப்டன் வாசு, மேஜர் ஜேம்ஸ், கேப்டன் சுந்தரி ஆகியோரின் சகோதரர் திரு உருத்திராபதி சேகர் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச்சுடரினை நீண்ட காலமாக கலை பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படும் நடன ஆசிரியை திருமதி ஷாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
நிகழ்வின் நினைவு உரை தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானிய செயற்பாட்டாளர் திரு செல்வா அவர்கள் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் நினைவு சுமந்து உரையாற்றினார். ஈழத் தமிழர் விடுதலை நோக்கிய பயணத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் பங்களிப்பு என்றும் தவிர்க்க முடியாதது என்றும் அவரின் இழப்பு இன்றுவரை எமது விடுதலைப் பயணத்தில் ஈடு செய்ய முடியாததாகவும் நினைவு உரையாற்றினார்.
நடன ஆசிரியை திருமதி ஷாமினி கண்ணன் அவர்களின் நெறியாழ்கையில் தேசத்து பாடல்களுக்கான நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.