SHARE

கோத்தபாயாவின் போர்க்கால வகிபாகம் -ITJP வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கை

கோத்தபாயா ராஜபக்ஷ எப்போதாவது பொறுப்புக்கூற வைக்கப்படுவாரா என கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு (ITJP) கோத்தபாய ராஜபக்ஷவின் போர்க்கால வகிபாகம் என்னும் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் 1980களில் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற முன்னைய வன்முறைக்காலப்குதியின்போது, பாரிய வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களில் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டிருந்ததான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வுசெய்து 2022 இல் ITJP யால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக இவ்வறிக்கை வெளிவருகின்றது

சிறிலங்காவில் போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, குறித்த உள்நாட்டுப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முக்கிய வகிபாகம் கொண்டிருந்ததற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன என மனித உரிமை வழக்கறிஞர்கள் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நூறு பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பதவிவகித்தபோது, 2009 இல் சண்டைக்களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியமைக்கான விரிவான ஆதாரங்கள் மற்றும் அவர் இராணுவத் தளபதியாக இல்லாதபோதிலும்கூட, பாதுகாப்புப் படைகளுக்கு கட்டளையிட்டதுடன், அவர்கள் மீதான செயற்றிறன் மிக்க கட்டுப்பாட்டினையும் கொண்டிருந்தமை, சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் சர்வதேச குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுக்கொண்டிருந்தமை தொடர்பாக அப்போதே நன்கு தெரிந்திருந்ததுடன், அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறியதுடன், அல்லது, தனக்குக் கீழே செயற்பட்டவர்களைப் பொறுப்புக்கூறவைக்க முயலவுமில்லை என்பதை சான்றுகளுடன் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட போர்த்தடை வலயங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் கோத்தபாய ராஜபக்ஷ கொண்டிருந்த வகிபாகத்தினையும், விசாரணைகளற்ற படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, எழுந்தமானகத் தடுத்தவைத்தல், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் தடுத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அவர் தவறியமையும் தொடர்பான ஆதாரங்களையும் இவ்வறிக்கை ஆய்வுசெய்கின்றது.

கோத்தபாயாவுக்கும் அவரது போர்க்கால தளபதிகளுக்கும் இருந்த படையணி மற்றும் பாடசாலைத் தொடர்புகள் 2009 வன்னி நடவடிக்கையின் போது இருந்த சிறிலங்கா இராணுவ கட்டமைப்பு இறுதிப்போரில் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைதல், 3 போர்த்தடை மண்டலங்களை ஒருதலைப்பட்சமாக அறிவித்து அதற்குள் பொதுமக்களை செல்லுமாறு கூறி பின்னர் அவற்றின் மீது கனரக ஆயுதங்களால் கொடூர மனங்கொண்டு தாக்கியமை, தரைவழி இராணுவச் செயல்பாடு பற்றிய கோத்தபாயாவின் அறிதல், மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களில் ஒவ்வொரு வருடமும் வெளிவந்த முரண்பாடான தொகைகள் என்பன குறித்து மிகத் தெளிவாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபாய தொடர்பிலான அதிர்ச்சி தரும் மேலும் பல தகவல்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ITJP யின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா
‘தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மிகவும் மோசமானவராக கோத்தபாய ராஜபக்சவே இருக்கமுடியும். 1989 தொடக்கம் 2009 வரைக்கும், அத்துடன் இன்றுவரைக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கு காணப்படுகின்றது. பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படாமலும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமலும் உள்ளன.

இவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏமாற்றத்தினையும் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தின. குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்காமல், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தேவைப்படும் மீளவும் நிகழமாட்டா என்பதற்கான உத்தரவாதத்தினை வெறுமனே ஆணைக்குழுக்களின் விசாரணைளால் பெற்றுவிடமுடியது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email