திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது. இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.
இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.