SHARE

சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான செயல்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள்

தமிழீழ மாவீரர் நாள் நினைவுகூரும் நிகழ்வுகளில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படுவது பற்றியும், இதற்குத் தீர்வாக சர்வதேச கண்காணிப்பாளர்களை நினைவு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு இராஜதந்திரிகள் அனுப்பவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்த சிறுகுறிப்பின் முழுவடிவம் இதோ:

2009 மே மாதத்தில் உள்நாட்டுப்போரின் முடிவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளமையானது, சிறிலங்காவில் தண்டனையிலிருந்து விலக்களிப்பு மேலும் அதிகரித்துள்ளதையே காட்டிநிற்கின்றது.

போர் முடிவடைந்திருந்தாலும், சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள்மீதான துன்புறுத்தல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையானது தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் மட்டுமல்லாது, கூட்டுவாழ்வு, பாரம்பரியம், நம்பிக்கை ஆகியனவற்றைக் கட்டியெழுப்பும் சமூகக்கட்டமைப்பையும் சிதைக்கின்றது.

நவம்பர் 27ஆம் திகதி தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்தவர்களை நினைவுகூருவதற்கும் கவலைகொள்வதற்கும் தமிழ் குடும்பங்களுக்கு இருக்கும் நியாயமான உரிமைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் மீறிவருகின்றது.

2014ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பி, வெளிநாடுகளுக்குத் தப்பிவந்தவர்களின் வாக்குமூலங்களை எனது நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது. சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்கள் வடக்குக் கிழக்கில் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைப் படம்பிடித்து, பின்னர் அவர்களிடம் சென்று, அவர்களை அச்சுறுத்தியுள்ளன.

2022 நவம்பரில் வடக்கிலுள்ள கல்லறையொன்றில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஒருவரை நாங்கள் நேர்காணல் கண்டபோது, புதிய ஜனாதிபதி இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதை அனுமதித்திருந்தமையால், உரையாற்றுவது பாதுகாப்பானது என்று தான் எண்ணியதாகத் தெரிவித்தார். ஆனால், ஓரிரு நாட்களின் பின்னர், அவரது கருத்துச் சுதந்திரத்தையும், நடமாடும் சுதந்திரத்தையும் மீறும் வகையில், அவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்; அவர் தன்னுடைய புதிதாகப் பிறந்த குழந்தையையும் செழிப்பாக நடந்த வியாபாரத்தையும் கைவிட்டு, வெளியேறினார்.

‘இந்த நினைவு நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்குவது’ யார் என்று விசாரணைகளில் பாதுகாப்புப் படைகள் கேட்கின்றார்கள். இதில் முக்கியமான ஒரு விடயத்தை அவர்கள் தவறவிடுகின்றார்கள். நினைவேந்தல்களை ஏற்பாடுசெய்வதும், அவற்றில் கலந்துகொள்வதும் வெறுமனே எதிர்ப்பினை வெளிப்படுத்தும் செயல்கள் அல்ல, மாறாக, இக்கொடூரமான போரில் உயிர்தப்பிய அனைவராலும் உணரப்படும் தனிப்பட்ட துயரங்களின் வெளிப்பாடேயாகும். அரச ஆதரவு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டவர்களே; அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் காணமல்போதல்கள், சித்திரவதை அல்லது மரணம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களுக்கு மேலதிகமாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையின்மையை காண்பதுடன். உயிர்ப்பழித்ததற்கான குற்றஉணர்ச்சியுடனும் வாழ்கின்றார்கள்.

உண்மைக்கும் நீதிக்குமான அவர்களது தேடலில், இறந்துபோனவர்களையும் காணாமற்போனவர்களையும் தொடர்ந்து நினைவுகூருவது தங்களது தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பென உயிர்தப்பியவர்கள் கருதுகின்றார்கள். நவம்பர் 27இல் வெறுமனே அவர்களது குடும்பங்களும் நண்பர்களும் மட்டுமன்றி, மாறாக முழுச் சமூகமே அவர்களின் தியாகங்களையும் கூட்டுத் துன்பத்தையும் நினைவுகூருகின்றது.

உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பொது இடங்களிலும் தனியாகவும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான தங்களது உரிமையினை மீளவும் பெற்றுக்கொள்வதை பல ஆண்டுகளாக நாம் கண்டிருக்கின்றோம். இந்தச் செயற்பாட்டில் உயிர்தப்பி, சாட்சியங்களாக இருப்பதன் நிதர்சனத்துடன் அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாங்கள்பட்ட தனிப்பட்ட துன்பங்களை மட்டுன்றி, தங்களது சமூகங்களது துன்பங்களதும் நினைவுகளையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக புதிய வழிகளைத் தேடிக்கொள்கின்றார்கள்.

எந்தவொரு அடக்குமுறையும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மனிதனுடைய தேவையை, குறிப்பாக அது உங்களது பிள்ளையாவோ அல்லது பெற்றோராகவே இருக்கும்பட்டத்தில், அடக்கிவிடப்போவதில்லை. போர் முடிந்தபின்னர், பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது, சிறைக்காவலர்கள் பழிவாங்குவாங்குவார்கள் என்பதை முழுமையாகத் தெரிந்திருந்தும், நவம்பர் 27ஆம் திகதி அதிகாலையில் எழுந்து மெழுகுதிரி ஏற்றியதாக சித்திரவதையிலிலிருந்து உயிர்தப்பிவந்த ஒருவர் விபரித்தார். இருப்பினும், அவர்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி சுயமரியாதை அதுவாகவே இருந்ததுடன், அதற்கான அந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றினை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார்; போரில் உயிர் தப்பியவர்கள் அவர்களுக்கிருக்கும் வருத்தப்படுவதற்கான உரிமையைக் கூட பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ள, நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்வதன்மூலமாக தங்களது மனவலிகளுக்கு ஆறுதல்தேடக்கூட முடியாதுள்ள சூழ்நிலையில், இவ்வாறான ஒரு அமைப்பில் உயர்தப்பியவர்கள் கலந்துகொண்டு, தங்கள் வாக்குமூலத்தை வழங்குவது சாத்தியமல்ல. உண்மயை கண்டறியும் ஆணைக்குழு நம்பகரமானதாகச் செயற்பட்டு, வெற்றியடையவேண்டுமாக இருந்தால், அரச ஆதரவுடன் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், நவம்பர் 27ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளைப் பாதுகாப்புப் படைகள் கண்காணிக்காது விடுவதுடன் என்பதுடன், இவற்றை ஏற்பாடுகள் செய்பவர்கள் அல்லது பங்குபற்றுபவர்களுக்கு எதிராக எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்கவும்கூடாது. இந்த அடக்குமுறையைக் கண்டு இராஜதந்திர சமூகம் அமைதிகாக்காது இருப்பதுடன். சாதாரண உடைகளில் வரும் அதிகாரிகள் புதைப்படங்கள் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அனுப்பவேண்டும்.

யஸ்மின் சூக்கா,
JTJP

Print Friendly, PDF & Email