SHARE

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளின் வீடியோ தொகுப்பு தமிழ் இளையோரால் வெளியீடு

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக கோரும் காணொளி ஒன்றினை தமிழ் இளையோர் வெளியிட்டுள்ளார்கள்.

உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு விதிமுறைகள் 2020 இல் நடைமுறைக்கு வந்ததில் இருந்து ICPPG இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யக் கோரும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் ICPPG உடன் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தமையும் இது போல மே மற்றும் யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (GSR) தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பில் ICPPG, தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேடி அனைவரையும்; தொடர்பு கொண்டு, தொடர் சந்தப்புக்களை நடாத்தி, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அழுத்தம் வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் இடைவிடாத முயற்சியின் விளைவாக பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பின்கள் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யுமாறு பகிரங்கமாக கோரிக்கை விடுத்து தங்கள் ஆதரவினை வெரிவித்து வருகின்றனர்.

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கைப் போர்க் குற்றவாளிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பின்கள் வெளியிட்ட பகிரங்க அறிக்கைகளைத் தொகுத்து இன்று தமிழ் இளையோர் காணொளி ஒன்றை வெளியிட்டனர்.

Print Friendly, PDF & Email