SHARE

”இந்திய மீனவர்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எமது மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி வருகின்றனர்”  என  மன்னார் மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் , அந்நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள்  மேலும் தெரிவிக்கையில் ” இந்திய மீனவர்களின் தொடர் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கையினால் இலங்கை மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக அண்மைக்காலமாக அதிகரித்து வரும்  இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எமது மீனவர்களின் பல லட்சம் ரூபாய் பெறமதியான  மீன் பிடி வலைகளை இந்திய மீனவர்கள் சேதப்படுத்திச் செல்கின்றனர்.

இதன்காரணமாக எமது மீனவர்கள் வெறும் கையுடன் கரை திரும்பும் நிலை ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் கருவாட்டுக்கு மீன் வெட்டுதல்,வலையில் இருந்து மீன்களை அகற்றுதல் உள்ளிட்ட வேலைகள் செய்து வரும் பெண்களும் தமது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இலங்கை கடல் பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்துச் செல்லும் வரை கடற்படையினர் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

எனவே இவ்விடத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்களாக வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களினால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email