
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்பாகவுள்ள சுற்றுவட்ட வளைவில் இந்த போராட்டம் இன்று (08.03.2023) இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் தருணத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க வேண்டும்.
அத்துடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதனை பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட கறுப்பு மகளிர் தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.