SHARE

– ரணிலிடம் திட்டவட்டமாக தெரிவித்த கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும்10 ஆம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட வேண்டும் என்று காலக்கெடுவை விதித்துள்ளதோடு, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை முன்னெடுப்பது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றையும், நிரந்தரமான அரசியல் தீர்வு விடயத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான திட்ட முன்மொழிவொன்றையும் தனித்தனியாக கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைவாக இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மாலை ஐந்து மணிமுதல் ஆறுமணி வரையில் இடம்பெற்றிருந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், சம்பந்தன் தலைமையில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Print Friendly, PDF & Email