SHARE
செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

இலங்கைப்போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் மாவீரர் நாளாகிய நேற்று இலண்டன் ஒக்ஸ்போர் மாவீர் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

இந்நிலையில், ஒக்ஸ்போர்ட் உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நேற்று நடைபெற்ற மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வின் போது அங்கு வருகை தந்திருந்த பெருந்திரளான புலம்பெயர் தமிழர்களிடம் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்த்திட்டம் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

பிரதான செயற்பாட்டாளர் மநுமயூரன் கிருபானந்த மநுநீதி அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி கணக்கெடுக்கும் பணியில் செயற்பாட்டாளர்களான அஜிபன் ராஜ் ஜேயெந்திரன், கபிலன் அன்புரெத்தினம், நிலக்ஐன் சிவலிங்கம், பிரசாந் இராசரத்தினம், சசிகரன் செல்வசுந்தரம், செல்வராசா கஜானன், ஶ்ரீ அபிராமி ஶ்ரீ பாலேஸ்வரன், சுஜிதா கனகசபாபதி, விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன், துவாரகன் குமாரகுலசிங்கம், புவனேந்திரன் சிவராம், மகாலிங்கம் சோமலிங்கம், வாகீசன் விசாகரட்ணம் ஆகியோர் வருகை தந்திருந்த மக்களிடமிருந்து யுத்தத்தினால் இறந்த அவர்களின் உறவுகளின் பெயர் விபரங்களை சேகரித்தனர்.

இந்நிலையில் மேற்படி செயற்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த செயற்பாட்டாளர்கள் இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு மிகவும் அத்தியவசியமாக இந்த பணி இருக்கின்றமையால் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பணியில் முன்வந்து ஈடுபடுவதுடன் ஈழ மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அவர்களின் கனவினை நனவாக்க எம்மாலான சிறு பணியினை இதன் மூலம் செய்வதில் மன நிறைவு அடைகின்றோம் என தெரிவித்தார்கள்.

Print Friendly, PDF & Email