SHARE

மறுசீரமைப்பு என்ற பெயரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை முக்கியமான மறுசீரமைப்பாக கருதப்படுகின்றது என்றும் ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திருத்தம் ஊடாக என்ன நடக்கப் போகின்றது என்றும் நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்தவர்களே 18 ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று அவர்கள் 19ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்ததுடன், பின்னர் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்துவிட்டு இப்போது 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கவும் தயாராகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் ஓரிடத்தில் அல்லாது அங்கும் இங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது என்ன விதமான நாடாளுமன்றம் என கேள்வியெழுப்பிய அவர், மக்கள் மாற்றமொன்றையே கோருகின்றனர் என்றும் ஆனால் இந்த சபையில் இருக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இதுவொரு மோசடியாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்று மக்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு மாற்றங்களுக்கு முதலாவது படியென்று கூறி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் எனவே, இந்த முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email