SHARE

சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளால் தமது பாரம்பரிய சிறகுவலை மீன்படி தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக கூறி இன்றுடன் 21 நாட்களாக கிராஞ்சி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பொலிசார் சகிதம் அக் கடற்பகுதிக்கு வந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் முரன்பட்டதுடன் கடலை அளக்கவும் முற்பட்டுள்ளனர்.

‘கடலை அளக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு மீண்டும் அட்டைப்பண்ணைகளை அமைப்பதற்கே முயற்சிக்கிறீர்கள்’ என போராட்டக்காரர்கள் தெரிவித்து அளப்பதற்கான காரணத்தை கோரிய போது, அதனை அவர்களிடம் கூற மறுத்த அதிகாரிகள் நீதிமன்றின் அனுமதியுடனே வந்துள்ளோம் என போராட்டக்காரர்களை மிரட்டியுள்ளார்கள்.

கிராஞ்சி இலவன்குடா கடற்பரப்பில் ஏறத்தாழ 45 வருடங்களுக்கு மேலாக பாரம்பரியமாக சிறகுவலை மீன்பிடி முறை தொழில் இடம்பெற்றுவருகின்றது. அதேபோல் பெண் தலைமைத்துவக்குடும்பங்களை சேர்ந்த 60 வரையான பெண்கள் குறிப்பாக பண்ணை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நண்டு, இறால் மீன் அட்டை போன்றவற்றினை பிடிப்பதை தமது அன்றாட வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அட்டைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கடல் தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றது. அவ்விடங்களில் மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். அவ்விடங்களில் பண்ணை அமைக்கப்பட்டதால் மீன் இனங்களுக்கும் கரைக்குமான தொடர்பு தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் அதிக வெளிச்சமுள்ள மின்விளக்குகள் காரணமாக மீன்கள் கரையை நோக்கி உணவு தேடி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொழிற்செய்யும் மீனவர்களின் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடற்றொழிலாளர் சங்கம்இ கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம்இ பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயம் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு பலமுறை அறிவித்திருந்தோம். ஆனால் இதற்கான சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை. இன்று 21 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என அவர்கள் விசனம் தெரிவித்தனர்.

இதனிடையே கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத அட்டைப்பண்ணைகளுக்கு எந்தவித சிபாரிசும் தான் வழங்கவில்லை என நீரியல் வளத்துறை அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email