SHARE

இலங்கையின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) பிற்பகல் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனும்;, சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ்.மறைமாவட்ட கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வண.பிதா றொசான் அடிகளார், யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் ரகுராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அஸ்வினின் உறவினர்களும் நண்பர்களும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

யாழ்.ஊடக அமையத்தின் நிறுவுனர் தயாபரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வு இரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அஸ்வினின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை அவரது பெற்றோர்கள் ஏற்றிவைக்க மலர் மாலையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் நிக்சன், யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் ரகுராம் மற்றும் அஸ்வினின் சகோதரி செல்வி சுவர்ணா ஆகியோர் அணிவித்தனர்.

தொடர்ந்து மலர் அஞ்சலியினை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து அரங்கில் இருந்தோரும் மலர் அஞ்சலியில் இணைந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அஸ்வின் குறித்த நினைவுரைகள்; இடம்பெற்றதுடன் விசேட நிகழ்வாக அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசிலை பெறும் யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவிக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் அஸ்வினின் பெற்றோர் இணைந்து 50 ரூபா பணத்தொகையினையும்; நினைவு சின்னத்தையும் வழங்கிவைத்தனர்.

அஸ்வின் குறித்து இடம்பெற்ற நினைவுரைகளில் முதலாவதாக உரையாற்றிய யாழ். கத்தோலிக்க பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம ஆசிரியர் வண.பிதா றொசான் அடிகளார்,

அஸ்வின் கோடுகளால் பேசியவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்; தலை சிறந்தவொரு கார்டூனிஸ்ட். Cartoonist ஐ தமிழில் மொழிபெயர்க்கின்ற போது வழக்கமாக எல்லோரும் கேலிச்சித்திரக்கலைஞன் என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் கேலி செய்வதாக வரைவதில்லை. தங்களின் படங்களின் வழியாக சமூகத்தின் யதார்த்தத்தை பேசுவார்கள். அவ்வாறே அஸ்வினும் தனது படங்கள் வழியாக பேசினார். அஸ்வினை நான் ஒரு தீர்க்கதரிசியாக பார்க்கிறோன். கத்தோலிக்க விவிலியத்தில் பல தீர்க்கதரிசிகள் இறைவாக்கினர்கள் தோன்றி மறைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வப்போது இருக்கின்ற சமூக பிரச்சினைகளை முன்கூட்டியே வெளிகொண்டு மக்களுக்கு எடுத்து கூறுபவர்களாக இருந்தார்கள்.

அவ்வாறு தான் அஸ்வினின் ஆற்றலும் இருந்தது. இறைவன் கொடுத்த திறமைகளால் அவர் அதனை சீராக செய்து முடித்தார். உண்மையை எவ்வாறு தெளிவாக வரைபடங்கள் மூலமாக வெளிப்படுத்தலாமோ அதனை சிறப்பாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கார்ட்டூன்கள் இன்றைய காலத்திற்கும் பொருந்துவனவாக கதை சொல்லுவனவாக இருக்கின்றதை பார்க்கக்கூடியதாக உள்ளது. இதனாலே அவரை தீர்க்க தரிசன ஓவியர் என விழிக்கமுடிகின்றது. அவர் போதைப்பொருள் குறித்து அன்று வரைந்த கார்ட்டூன் இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள இன்றைய சூழலிலும் நன்கு பொருந்துவதாக உள்ளதனை ஒரு உதாரணமாக சொல்லாம்.

இவ்வாறான அசாத்திய திறமை வாய்ந்த ஊடகவியலாளரை நாம் இழந்திருப்பது தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பு. இந்நிலையில் அவரின் பெயரால் அவரது குடும்பத்தினரால் ஊடககற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு கற்றல் உதவிக்காக வழங்கப்படும் புலமைப்பரிசிலை வரவேற்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய பிரதம விருந்தினர் சி.வி. விக்னேஸ்வரன்,

இளவயதில் திரு.அஸ்வின் அவர்களைத் தமிழ்த் தாய் இழந்தமை இலங்கைத் தமிழ் ஊடகப் பரப்பில் ஈடு செய்ய முடியாதொரு பெரும் இழப்பு என்றால் அது மிகையாகாது. அவர் நகைச்சுவைச் சித்திர விற்பன்னராக இருந்து வந்த அதே வேளையில் குறும்பட இயக்குனராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வந்தவர். “கேட்டியளே சங்கதி” என்ற பத்தி எழுத்திற்காக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் 2011 ஆம் ஆண்டு அவருக்கு சிறந்த பத்தி எழுத்துக்கான அதியுயர் விருதும் (டீநளவ ஊழடரஅn றுசவைநச) கிடைத்தது. இலங்கைச் சினிமாவை வளர்ச்சிப் பாதையில் நகர்த்த வேண்டும் என்றும் அவர் இங்குள்ள கலைஞர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அவாக் கொண்டிருந்தார். ஆனால் தமது 36 ஆவது வயதில் திடீரென்று மாரடைப்பால் இறைவனடி சேர்ந்து விட்டார்.

ஒரு சிறந்த நகைச்சுவை சித்திரவியலாளர் பொதுவாக 5 விடயங்களைப்பாவிப்பார். குறியீடு, தலையங்கங்களும் விளக்க அடையாளங்களும், ஒப்புவமை, வஞ்சப்புகழ்ச்சி, மிகைப்படுத்தல் இவை அனைத்து அஸ்வினின் ஓவியங்களில் அடங்கியுள்ளன.
திருநீற்றுக் குறிகள், ஒரு குங்குமப் பொட்டு, வெள்ளைத் தாடி, கண்ணாடி போன்றவற்றைக் கீறி அதன் மேல் வேட்டி சால்வையைப் போர்த்தி வரைந்த வரைவு தான் அவரது ஓவியங்களில் என்னுடைய குறியீடாக அமைந்து விட்டது.

ஒரு முறை முதலமைச்சரான என்னை சுதந்திரமாக நகர விடாமல் என் கட்சி நடந்து கொண்டதை பின்வருவமாறு நகைச்சுவைச் சித்திரத்தில் வரைந்தார் – ஒரு மாடு ஓட எத்தனிக்கிறது. வாலைப் பிடித்து ஒருவர் அதனை நிறுத்தப் பார்க்கிறார். சிலர் ஜல்லிக்கட்டு மாட்டை நிறுத்த எத்தனிப்பது போல் அந்த மாட்டின் மீது தாவிப் பிடித்து நிறுத்தப் பார்க்கின்றார்கள். பின்னால் நின்று ஒருவர் “அடக்கு”, “அமுக்கு” என்று அலறுகின்றார்! ஆனால் மாடோ முன்னேறிச் செல்கின்றது. இதில் மாடு நான், வாலைப் பிடித்தவர் நண்பர் மாவை, “அடக்கு”, “அமுக்கு” என்று அலறியவர் சம்பந்தன் ஐயா மற்றும் மாட்டின் மீது தாவி ஏறி நிறுத்தப்பார்த்தவர்கள் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள்! மாட்டை என் போன்று சித்திரிக்க மாட்டின் நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கண்ணாடி, சிவத்த குங்குமப் பொட்டு வரையப்பட்டிருந்தன. தாடி இல்லை! எனது முக்கியமான குறியீடாக மாட்டின் கழுத்தைச் சுற்றி பச்சை வெள்ளை சிவப்பு நிறம் கொண்ட சால்வை பறப்பதை வரைந்து காட்டுகின்றார் அஸ்வின்! குறியீடுகளைக் கொண்டு தமது எண்ணங்களை வெளிக்கொண்டு வந்ததில் வல்வராக இருந்தார் திரு.அஸ்வின் அவர்கள்.

ஆகவே சிறந்த ஒரு நகைச்சுவைச் சித்திரக்காரரின் குணவியல்புகளை அஸ்வின் அவர்கள் தமது வாழ்க்கையில் எடுத்துக் காட்டினார். அப்படி இருந்தும் சற்றும் ஆணவம் அல்லது அகந்தை இன்றியே தனது செவ்வியை அந்தக்காலத்தில் வழங்கியிருந்தமை அவரின் அப்போதைய வீடியோ கசட்டின் வாயிலாக வெளிவருகின்றது. அதனை எனக்கு அனுப்பிய அவரின் சகோதரருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக!

இறைமையே எம்மை வழிநடத்துகின்றது என்பதை அறியாதவன் அகந்தைக்கும் ஆணவத்திற்கும் அடிமையாகின்றான். அப்பேர்ப்பட்டவர்கள் தான் தோல்விகளைக் கண்டு மிரண்டு போகின்றவர்கள். தோல்விகளை இறைவன் கற்றுக் கொடுக்கும் பாடங்களாக ஏற்றுக் கொள்வதே உயர்ந்த மனிதர்களின் பண்புகள். அந்த விதத்தில் அஸ்வின் சுதர்சன் மக்களுள் ஒரு உயர்ந்த மனிதனாக வைத்து புகழப்பட வேண்டியவர்.
அவர் நினைவாக பல்கலைக்கழக ஊடகக் கற்கை மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்குவது சாலச் சிறந்தது. வரவேற்பிற்குரியது என தனது உரையில் தெரிவித்தார்.

தொர்ந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நிக்ஷன் தனது உரையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. அமர்வு குறித்து பல கற்பனைகள் இருக்கின்றபோதிலும் அதனை அப்படியே வரையக்கூடிய அஸ்வின் தற்போது இல்லாமை தமிழ் ஊடகப்பரப்பில் பெரும் இழப்பு என்று குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நமது ஈழநாடு அனுசரனையுடன் அவரது குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இம்முறை யாழ்.பல்கலைக்கழக்தில் துணை வேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட ஊடக கற்கையில் சிறப்பு கலைமாணியாக இரண்டாம் ஆண்டில் கல்வியைத்தொடரும் மாணவி ஒருவருக்கு கற்றல் ஊக்குவிப்புக்கான பணத்தொகையாக ரூபா 50 ஆயிரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email