SHARE
செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதினமாக ஆகஸ்ட் 30 ந் திகதியை ஐ.நா. சபை பிரேரித்துள்ளது. இலங்கைத் தீவில் சிங்கள அரசினாலும் அவர்களினால் இயக்கப்படுபவர்களினாலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Trafalgar சதுர்க்கத்தில் ஆகஸ்ட் 30 ந் திகதியன்று இந்நினைவு தினம் பிற்பகல் 4 மணிமுதல் 7 மணிவரை நடைபெற்றது.

கடந்த இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதி கோரும் தாய்மார்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது. Trafalgar சதுர்க்கத்தில் ஏராளமான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வரிசையாகக்காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

ஆங்காங்கே வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாறுகளும், 83 ம் ஆண்டு யூலை கலவர நிகழ்வுகளும், இறுதி யுத்தத்தில் கொன்றொழிக்கப்பட்ட நிகழ்வுகளும் புகைப்படங்களுடன் தமிழ் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் புகைப்படங்களையும் பதாதைகளையும் ஏந்தியவண்ணம் காணாமல் போனவர்களுக்காக நீதிகோரி முழக்கமிட்டவண்ணமிருந்தனர்.

அக வணக்கத்துடன் ஆரம்பமான நினைவுநிகழ்வுக்கு பறை இசை முழக்கம் மேலும் மெருகூட்டியது. நிகழ்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரிட்டிஷ் பாராளுமன்ற பெண் எம். பி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்குத் தமது அனுதாபத்தை வெளிப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கொலம்பிய சொலிடாரிற்றி பிரசாரக் குழுவைச்சார்ந்த பிரமுகர் உரையாற்றியபொழுது தமிழ் மக்கள் தமது தமிழீழக் கோரிக்கையை ஒரு போதும் கைவிடக்கூடாது என்று கூறியபொழுது எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரின் சிறப்பு உரை திரு யோகலிங்கம் எம். பி அவர்களால் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் உரையாற்றினார்கள். பின்பு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நேரடி உறவுகள் தமது வலிமிகுந்த சாட்சியங்களை யும் போராட்டங்களையும்பதிவு செய்தார்கள். நன்றி உரையுடன் நினைவு தினம் இனிதே முடிவுற்றது.

Print Friendly, PDF & Email