SHARE

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய அவர், நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, நேற்று பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆரம்பமானது.

28 நாடுகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக உரையாற்றினார்.

இலங்கை எதிர்நோக்கிவரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச ஒத்துழைப்பும் சகோதரத்துவமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோசடி, ஊழல் குறைக்காமல் சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி விடயங்களை நிலைநாட்டாமல் நெருக்கடியை நோக்கிச் சென்ற நாட்டிற்கு இலங்கையே உதாரணம் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

Print Friendly, PDF & Email