SHARE

முழுமையான ஆதரவை உறுதிசெய்தார் நிழல் இராஜாங்க செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Hon. Wes Streeting

சிறிலங்கா இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime 2020 ) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கான பிரித்தானியா நிழல் இராஜாங்க செயலரும் (Shadow Secretary of State for Health and Social Care) இல்போட் (Ilford) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய வெஸ் ஸரீற்றிங் (Hon. Wes Streeting MP) அவர்களுடன் சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(22.07.2022) மாலை 3 மணிக்கு மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் பிரித்தானிய தொழில் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (Tamils For Labour) தலைவர் திரு.சென் கந்தையா அவர்களும் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு (FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்து கொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்குள் சித்திரவதைகளுக்குள்ளான 200 பேரின் சாட்சியங்களையும் ICPPG சமர்ப்பித்திருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரி FCDOவிற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை இறுதியுத்தத்தில் இராணுவத்தினரிடன் சரண்டைந்தவர்கள் காணாமல்ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்ற விடயங்களையும் எடுத்துக்கூறினார். காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் இன்றும் தமது வீதிகளில் போராட்டம் செய்தும் இன்று வரையில் எந்த நீதியும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடந்து உரையாற்றிய சென்கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், அமெரிக்கா தடைசெய்த பின்னும் பிரித்தானியா தயங்குவது குழப்பத்தை தருகின்றது என்றும் குறிப்பிட்டார். சவேந்திர சில்வா கடந்த கால யுத்த குற்றங்களுக்கு மட்டுமன்றி, தொடரும் சித்திரவதைகளுக்கும் காரணமாக இருப்பதால்,உடனடியாக அவரை தடைசெய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு நியாயம் வழங்கும் விடயத்தில் உண்மையாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான நிலக்ஐன் சிவலிங்கம், பிரசாந் இராசரத்தினம், சிவஞானம் ஜெகநாதன், பொன்னம்பலம் குணசீலநாதன், லம்போதரன் நாகராஜா, சஞ்சீவன் சீறிதரன், கார்த்திக் நற்குணம் ஆகியோரும் கலந்து கொண்டு தமது சித்திரவதை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email