SHARE

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை விட மிருக பலத்தின் மூலம் செயற்பட விரும்புகின்றோம் என்ற ஆபத்தான செய்தியை, இந்த நடவடிக்கைகள் ஊடாக புதிய அரசாங்கம் மக்களுக்கு அனுப்புகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது என்ற செய்தியை இலங்கைக்கு அவர்களின் சர்வதேச பங்காளிகள் உரத்த குரலில் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Print Friendly, PDF & Email