SHARE

மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச இப்போது எங்கே இருக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் நுழைவதற்கு முன்பே அவரை வெளியேற்றி விட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், அனைத்துலக ஊடக நிறுவனமான AFP யிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால், இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் தொடர்ந்தும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், கோட்டாபய பதவி விலகவுள்ள 13 ஆம் நாள் வரையில் தாங்கள் தங்கியிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களை அகற்றுவதற்கு படையினர் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், கொழும்பு துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் சென்றது யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆயினும், ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் உறவினர்களே கப்பலில் சென்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, ஏறக்குறைய 200 அரசியல்வாதிகள் திடீரென வெளிநாடு சென்றுள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email