SHARE

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானியா வாழ் உறவுகள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பு

செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

யுத்தக்குற்றவாளியான இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை, உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சட்டத்தின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், மற்றும் ஒரு இராஜதந்திர சந்திப்பு பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், சிப்பிங்பானட் (Chipping Barnet) பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய தெரசா வில்லியர்ஸ்(Rt. Hon. Theresa Villiers MP) அவர்களுடன் இடம்பெற்றுள்ளது.

கடந்த வியாழன் (16 .06.2022) அன்று 3 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்ற இந்த சந்திப்பு, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச சட்ட மையம் (ICPPG) என்ற அமைப்பினரால், இலங்கையில் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் புலம்பெயர் குடும்பத்தினர் சார்பாகவும், சித்திரவதையில் தப்பியவர்கள் சார்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரான திரு சாருப்பிரியன் சிறீஸ்கரன் மற்றும் திரு ரூபசிங்க தென்னக்கோன் முதியான்சிலாங்கே ஆகியோர் கலந்துகொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது உரையி்ன் போது இறுதியுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு, அந்த நேரத்துல் 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சவேந்திர சில்வாவே காரணம் என்பதையும், இவரது கட்டளையின் கீழே வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP என்ற அமைப்பு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடன் சரண்டைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை என்ற விடயங்களையும் எடுத்துக்கூறினார். காணாமல் ஆக்கப்பட்டோரின். பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் இன்றும் தமது வீதிகளில் போராட்டம் செய்தும் இன்றுவரையில் எந்த நீதியும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த இருவருடங்களுக்குள் சித்திரவதைக்கு உள்ளான 200 பேரின் ஆதாரங்களை ICPPG பிரித்தானிய அரசுக்கு வழங்கியிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிரித்தானியாவே இலங்கையில் இனப்பிரச்சனைக்கு வித்திட்ட காரணத்தாலும், தொடர்ந்து இராணுவ ஆயிதங்களையும் பயிற்சியையுத் வழங்கி வருவதாலும், தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்றும் கீத் குலசேகரம் வலியுறுத்தினார்.

திரு சாருப்பிரியன் சிறீஸ்கரன் அவர்கள், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் சாட்சியங்களாக வாழ்பவர்கள் மற்றும் சித்திரவதையில் தப்பித்தவர்கள் சார்பில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் தனது தந்தையான திரு அப்புத்துரை சிறிஸ்கரன், 10/08/1996 அன்று, தமது வீட்டில் வைத்து, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார் என்றும், தடுப்புகாவலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார். அவரை தேடி நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் தன்னையும் கடத்திச்சென்று கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டார். இதனால் தனது உயிரை பாதுகாக்க பிரித்தானியா வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும், பிரிந்தானியாவிலிருந்து தான் தொடர்ந்தும் போராடுகிறேன் என்றும் தெரிவித்தார்.

திரு ரூபசிங்க தென்னக்கோன் முதியான்சிலாங்கே அவர்கள், 1987-89 காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற JVP எழுச்சியை அடக்குவதற்காக இலங்கை அரசு சிங்கள மக்கள் மீது மேற்கொண்ட கடத்தல்கள் மற்றும் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கலந்துகொண்டார். அவர் தனது அனுபவந்தை பகிரும் போது, JVP அமைப்பில் உறுப்பினராக இருந்த அதனது தந்தை கடந்தப்பட்டு நி்ரந்தரமாக காணாமல் ஆக்கப்பட்டமையை எடுத்துரைத்தார். அத்துடன் இலங்கை அரசின் பொய்யான பரப்புரையை நம்பி தமிழர்களை பயங்கரவாதிகள் என்று ஆரம்பத்தில் நம்பிவிட்டதாகவும், பின்னர் இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட கொடூரங்களை அறிந்து முரண்பட்டதால் தானும் சித்திரவதைக்கு உள்ளடக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

சவேந்திர சில்வா கடந்த கால யுத்த குற்றங்களுக்கு மட்டுமன்றி, தொடரும் சித்திரவதைகளுக்கும் காரணமாக இருப்பதால், உடனடியாக அவரை தடைசெய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு நியாயம் வழங்கும் விடயத்தில் உண்மையாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இவற்றை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு, கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் திரேசா வில்லியர்ஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார். சவேந்திர சில்வாவை தடைசெய்வது தொடர்பில் தான் வெளிப்படையாவே ஆதரவு வழங்குவேன் என்றும் இது தொடர்பான பாராளுமன்ற விவாத்த்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் வாக்களித்துள்ளார்.

Print Friendly, PDF & Email