SHARE

கலாநிதி ரூபா ஹக் எம்.பி (Dr Ruba Huq MP) தன்னுடைய முழுமையான ஆதரவை வழங்க உத்தரவாதம்

செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமானவரான, இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை, உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும், பிரித்தானியா அரசுக்கு அழுத்தத்தை வழங்குமாறும் கோரி, மற்றும் ஒரு இராஜதந்திர சந்திப்பு பிரித்தானியாவின் ஈலிங் மத்தி (Ealing Central) மற்றும் அக்டன் (Acton) பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய கலாநிதி ரூபா ஹக் (Hon. Ruba Haq MP) அவர்களுடன் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய் 07 June 2022 அன்று மதியம் 1 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்ற இந்த சந்திப்பு, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச சட்ட மையம் (ICPPG) என்ற அமைப்பினரால், சித்திரவதையில் தப்பியவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் ICPPG பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது உரையி்ன் போது, இறுதியுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வாவே தலைமை தாங்கியிருந்தார் என்பதையும் இவரது கட்டளையின் கீழே வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP என்ற அமைப்பு பிரித்தானி வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடன் சரண்டைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை என்ற விடயங்களையும் எடுத்துக்கூறினார். காணாமல் ஆக்கப்பட்டோரின். பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் இன்றும் தமது வீதிகளில் போராட்டம் செய்தும் இன்றுவரையில் எந்த நீதியும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளரும் தமிழீழ தேசிய கவிஞருமான பெருமதிப்பிற்குரிய புதுவை இரத்தினதுரை அவர்களின் சார்பில் அவரது மகனான திரு சோபிதன் இரத்தினதுரை அவர்கள் கலந்து கொண்டிருந்ததை எடுத்துக்காட்டி, இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி தேவை என்பதை என்பதை எடுத்துரைத்தார்.

இவற்றை விட கடந்த இருவருடங்களுக்குள் சித்திரவதைக்கு உள்ளான 200 பேரின் ஆதாரங்களை ICPPG பிரித்தானிய அரசுக்கு வழங்கியிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிரித்தானியாவே இலங்கையில் இனப்பிரச்சனைக்கு வித்திட்ட காரணத்தாலும், தொடர்ந்து இராணுவ ஆயிதங்களையும் பயிற்சியையுத் வழங்கி வருவதாலும், தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்றும் கீத் குலசேகரம் வலியுறுத்தினார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்காவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

மேலும், இலங்கை இறுதி யுத்தத்தின் சாட்சியங்களாக வாழ்பவர்கள், சித்திரவதையில் தப்பித்தவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களான கபிலன் அன்புரெத்தினம், பகிரன் ராசரட்ணம், நிலக்ஜன் சிவலிங்கம், அஜிபன் ராஜ் ஜெயந்திரன் மற்றும் சஜந்தன் மகேந்திரம் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் அனுவபங்களை பகிர்ந்துகொண்டதுடன், சவேந்திர சில்வா கடந்த கால யுத்த குற்றங்களுக்கு மட்டுமன்றி, தொடரும் சித்திரவதைகளுக்கும் காரணமாக இருப்பதால், உடனடியாக அவரை தடைசெய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு நியாயம் வழங்கும் விடயத்தில் உண்மையாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இவற்றை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு, கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார்.

பிரித்தானியா வாழ் தமிழர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் இளம் தலைமுறையினர் இந்த முயற்சியை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email