SHARE

Sri Lanka: War on Civilians கண்காட்சியும், ITJP மற்றும் HRDAG ஆகிய அமைப்புக்களின் இறந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம் (Counting The Dead Project)

2009 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலைசெய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பிரிதமர் வாசல்ஸ்தல முன்றலிலும் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுவருகின்றன.

இதில் குறிப்பாக பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இறுதி யுத்தம் பற்றிய கண்காட்சி் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நிழல் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஜெனட் டாபி எம்பி (Hon. Janet Daby MP) அவர்கள் நேரில் சமூகம் தந்து இந்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வேற்றின மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையில் யுத்த காலத்தில் உயிரிழந்தவர்களை பெயர் விபரங்களுடன் ஆவணப்படுத்தி, சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பித்து இலங்கையில் தமி்ழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை சட்ட ரீதியாக நிரூபிக்கும் நோக்கிலும், இறந்தவர்களை நினைவு கூரும் நோக்கிலும், ஜஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP என்ற சர்வதேச நிறுவனமும், தவல்களை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து உறுதிப்படுத்தும் அமெரிக்காவில் உள்ள HRDAG என்ற நிறுவனமும் இணைந்து ஆரம்பித்துள்ள இலங்கையில் யுத்த காலத்தில் இறந்தவர்களின் விபரங்களைத் திரட்டும் பணியும் (Sri Lanka: Counting the Dead Project) இந்த இரு இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் விபரம் திரட்டும் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இனப்படுகொலையை நிரூபிப்பதில் இந்த விபரங்களின் அவசியம் பற்றியும் தொண்டர்கள் விளக்கம் வழங்கிவருகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக இடம்பெறும் இந்த முக்கிய இரு செயற்பாடுகளையும் தொண்டர்களான
விஜய் விவேகானந்தன், சசிகரன் செல்வசுந்தரம், அஜிபன் ராஜ் ஜெயேந்திரன், வினோதன் கந்தலிங்கம், விதுரா விவேகானந்தன், பிரசன்னா பாலசந்தந்திரன், ஆகியோர் உள்ளடங்கிய அணி முன்னெடுத்து வருகின்றது.

இதுபோல, ஒக்ஸ்போர்ட்டில் உள்ள தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்த பணியை, கபிலன் அன்புரெத்தினம், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, புயலேந்திரன் சதேந்லொயிற்றன், போல்ராஜ் பபிஷன், நல்லதம்பி அரவிந்தராஜ், சாருப்பிரியன் சிறீஸ்கரன் ஆகியோர் கொண்ட தொண்டரணி முன்னெடுத்து வருகின்றது.

இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை உடன் வழங்க முடியாதவர்கள் பின்னர் இணையத்திலுள்ள இலத்திரனியல் படிவம் மூலமாகவோ (https://itjpsl.com/reports/counting-the-dead) அல்லது itjpsl@gmail.com, countingthedead@gmail.com, info@hrdag.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவோ அனுப்பி வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email