SHARE

தொழிற்கட்சியின் இரவு விருந்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ் இளையோர் அணி

செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

பிரித்தானிய தொழிற்கட்சியினரின் தேர்தல் பிரச்சார நிதிசேகரிப்புக்கான இரவு விருந்து ஒன்று கூடலில் கலந்து கொண்ட தமிழ் இளையோர் அணி அங்கு வருகை தந்திருந்த தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இலங்கை இராணுவத் தளபதியும் இனப்படுகொலை குற்றவாளியுமாகிய சவேந்திர சில்வாக்கு எதிராக பிரிந்தானியா தடை விதிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை எடுத்து விளக்கியதுடன், பிரித்தானிய அரசு உடன் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், இதற்காக நடவடிக்கை எடுப்போம் என்பதை உத்தரவாதம் செய்யும் விதத்திலும், “Sanction Shavendra Silva” என்ற பதாகைகளை தாங்கியபடி வீடியோக்களையுத் பதிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இராஜதந்திர நடவடிக்கை ஒன்றினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஏப்பிரல் 2021 இல், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வாவை தடை செய்ய போதுமான ஆதாரங்களை யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் (ITJP) பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது.

அதனை தொடர்ந்து மே 2021 இலும் யூன் 2021 இலும், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச சட்ட மையம் (ICPPG) இலங்கையில் மிக அண்மையில் சித்திரவதைக்குள்ளான 150 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கும் பிரிந்தானிய பிரதமருக்கும் ஆதாரங்களை சமர்ப்பித்திருத்தது. அவர்களின் முயற்சியால் 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் முன்பிரேரணை (EDM 64) ஒன்றும் கொண்டுவரப்பட்டது.

ICPPG யின் இளையோர் அணி பொதுமக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் இணையவழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன், வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் இதுவரையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சால் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பிலான தொடர் சந்திப்புக்களை இளையோர் அணி மற்றும் சித்திரவதையில் தப்பித்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நேரடியாக இந்த விடயத்தை கொண்டு சேர்க்கும் பட்சத்தில் இடம்பெறும் இந்த சந்திப்புக்களில் இதனை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் தமிழர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் என பலர் கலந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.

இந்தவகையிலேயே கடந்த 22 மார்ச் மாதம் 2022 அன்று நடைபெற்ற, தொழிற்கட்சியின் துணைத்தலைவரான, அதி மதிப்பிற்குரிய அஞ்சலா றெயினர் (Rt Hon. Angela Rayner MP) அவர்களுகள் சார்பில், வாட்டர்லூ மற்றும் சவுத்பாங்க் தொழிற்கட்சியின் (Waterloo and Southbank Labour) தேர்தல் நிதிசேகரிப்புக்கான விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இளையோர் அணி, அதனை சவேந்திர சில்வாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கான களமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, அதி மதிப்பிற்குரிய அஞ்சலோ ரெய்னர் (Rt. Hon. Angela Rayner MP), வேலைவாய்ப்பு உரிமைகளுக்கான நிழல் அமைச்சர் மதிப்பிற்குரிய ஜஸ்டின் மேடர்ஸ் (Hon. Justin Madders MP), Weaver Vale தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டு அமைச்சின் நிழல் அமைச்சருமான மதிப்பிற்குரிய மைக் அமெஸ்பரி (Hon. Mike Amesbury MP) மற்றும் Vauxhall தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் புளோரன்ஸ் எஷலோமி (Hon. Florence Eshalomi MP) உட்பட பல அரசியல் பிரமுகர்களை சந்தித்து சவேந்திர சில்வாவை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மேற்படி செயற்பாட்டாளர்கள் ஆரதவு திரட்டியிருந்தனர். அத்துடன் அவர்களது ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்கும் வகையில், ITJPயால் வடிவமைக்கப்பட்ட “Sanction Shavendra Silva” என்ற பச்சைநிற பதாகையை தாங்கியபடி படங்களும், பிரித்தானிய அரசுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் வீடியோக்களும் பெற்றிருந்தனர்.

தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவரான திரு சென் கந்தையா அவர்களின் தலைமையில், செயற்பாட்டாளர்களான கபிலன் அன்புரத்தினம், அஜிபன் ராஜ் ஜெயந்திரன், பிரசன்னா பாலசந்திரன், விதுரா விவேகானந்தன், சசிகரன், செல்வசுந்தரம், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, ரஜீவன் ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அணியே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

Print Friendly, PDF & Email