SHARE

இலங்கை இராணுவ அதிகாரிகளை பிரித்தானியா தடை செய்ய மேலும் மூன்று முக்கிய தலைவர்கள் வலுயுறுத்தல்

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு, மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் மோதல்களின் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான அதி மதிப்பிற்குரிய ரரீக் அஹமட் பிரபு (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) அவர்கள், இலங்கையில் தொடரும் கடத்தல்கள், சட்டவிரோத கைது, சித்திரவதை, அதிகரிக்கும் மர்மகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களைப்பற்றி கருத்துவெளியிட தவறியமையை சுட்டிக்காட்டியும், முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களை சந்திக்க தவறியதை கண்டித்தும், கடந்த 4 பெப்பிரவரி அன்று, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித்தலைவர்கள் உட்பட ஒன்பது முக்கியஸ்தர்கள் இணைந்து விரிவான ஆவணம் ஒன்றை, உரிய ஆதாரங்களுடன் அனுப்பி வைத்திருந்தனர்.

மேற்படி ஆவணத்துக்கு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாகவும், அதற்கு பிரித்தானிய அமைச்சர் பதில் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்குடனும் மேலதிக கடிதம் ஒன்றை மேலும் மூன்று முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் இணைந்து இந்தவாரம் அனுப்பி வைத்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய கெளரவ சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ தேவராஜா கலையரசன் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டுள்ள அந்த கடிதத்தில் அண்மையில் இடம்பெற்ற மூத்த விடுதலைப்புலி போராளி ஆதவனின் மர்மமான கொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அச்சுறுத்திவிட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி இளைஞர் பிரிவின் உதவி செயலாளர் நிதர்சனை வெள்ளை வான் ஒன்றில் கடத்துவதற்கு முற்பட்டமையையும் என பல சம்பவங்கள் ஆதாரங்களுடன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. மேலும், இவற்றை விட எம்மக்களிற்கு எதிராக இழைக்கப்படும் ஏனைய மனித உரிமை மீறல்கள் பற்றியும் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள நாம் நேரடியாக அறிவோம் எனவும் மேலதிக தகவல்கள் மற்றும் ஆதாரங்களை தனிப்பட்ட ரீதியில் தங்களுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இன்னும் தொடரும் கடத்தல்கள், சட்டவிரோத கைது, சித்திரவதை, அதிகரிக்கும் மர்மகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக,
இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) திரட்டப்பட்ட விரிவான ஆதாரங்கள் அடங்கிய விரிவான பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் கடந்த நவம்பர் 2019 முதல் இன்றுவரையான காலப்பகுதியில், ஊடகங்களினால் பதிவுசெய்யப்பட்ட செய்திகள் அடிப்படையில் மட்டும் 848 மனித உரிமைமீறல் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அதற்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மட்டுமன்றி தொடரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானியா அர்த்தமுள்ள நடவடிக்கு எடுக்கவேண்டும் என்றும், இவற்றுக்கு காரணமான இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது பிரித்தானியா தடைவிதிக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.

Additional-Joint-Letter-to-Lord-Ahmad-by-Tamil-MPs-Leaders-3-Signatories-March-2022

Joint-Letter-to-Lord-Ahmad-by-Tamil-MPs-Leaders-8-signatories-Feb-2022

Joint-Letter-to-Lord-Ahmad-by-Tamil-MPs-Leaders-Signed-by-Sritharan-MP

List-of-Most-Recent-Reported-Cases-of-Human-Rights-Violations-in-Sri-Lanka-Nov-2021-Mar-2022

Print Friendly, PDF & Email