SHARE

இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்கவேண்டும் என்று வவுனியாமாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால்  இன்று (வியாழக்கிழமை) வவுனியா பழையபேருந்து நிலையத்தில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு பத்துவருடங்கள் கடக்கின்ற நிலையில் எமக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுவருகின்றது.தொலைத்த எமது பிள்ளைகளை காணாமல் சாட்சிகளான பல தாய்மார்கள் மரணித்துவிட்டனர்.வயது முதிர்ந்த நிலையில் அடுத்த போராட்டத்திற்கு வருவோமா என்ற நம்பிக்கை அற்றநிலையில் இந்தப்போராடங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

இலங்கையில் இனப்படுகொலை தொடர்ச்சியாக இடம்பெறாமல் தடுக்கப்படவேண்டுமானால் ராயபக்ச குடும்பமும், இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த படைத்தளபதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்.

யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என தெரிவித்து அவர்களின் குடும்பங்களை ஏமாற்றுகின்றது.

எனவே சர்வதேச சமூகம் எமக்கான நீதியை விரைவில் வழங்கவேண்டும். இம்முறை இடம்பெற்றுவரும் ஜெனிவா மனித உரிமைபேரவை அமர்விலாவது உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு எமக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு உறுப்புநாடுகள் அனைத்தும் ஒத்துழைக்கவேண்டும்.

எமக்கான நீதி கிடைக்கும் வரையில் நாம் எமது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருவோம்” என்றார்.

Print Friendly, PDF & Email