SHARE

எமது ‘நமது ஈழநாடு‘ பத்திரிகையின் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவமகாராஜா இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று நமது ஈழநாடு அஞ்சலிகளை தெரிவிப்பதுடன் அவரது கொலைக்கான நீதியையும் கோரி நிற்கின்றது.

யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு தமிழ் தேசியத்தை வலியுறுத்தி கடந்த 2002 ஆம் ஆண்டு சி.சிவமகாராஜா நமது ஈழநாடு பத்திரிகையை ஆரம்பித்துவைத்ததுடன் அதன் பணிப்பாளராகவும் செயலாற்றிவந்தார்.

தமிழ்த் தேசியத்தை வலியுத்தி வெளிவந்த இப்பத்திரிகையினால் சவாலை எதிர்கொண்ட இலங்கை இராணுவம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று நாவலர் வீதியில் அமைந்திருந்த நமது ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தை அத்துமீறி சோதனை நடத்தியதுடன் உடமைகளை தீ வைத்தும் கொழுத்தினர். தொடர்ந்து நமது ஈழநாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் எதிராக அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பணிப்பாளர் சிவமகாராஜா தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இவரது வீடு அப்போது இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சிவமகராஜாவின் பாடுகொலையை கண்டித்து ஜ.நா. வின் யுனெஸ்கோ மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர் அமைப்பு ஆகியன அறிக்கைகள் வெளியிட்டதுடன் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அரசை கோரியிருந்தன.

இதேவேளை நமது ஈழநாட்டின் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவமகராஜா படுகொலை செய்யப்பட்டு அடுத்த ஆண்டே (2007) நமது ஈழநாட்டின் ஊடகவியலாளர்களான செல்வராஜா ரஜிவர்மன் ஏப்ரல் மாதமும் சகாதேவன் நிலக்சன் ஆகஸ்ட் மாதமும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email