SHARE
image_pdfPRINT

இலங்கை விமானப்படையினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று பிரித்தானியாவில் ஒன்றுதிரண்ட இளையோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து இலங்கை விமானப்படையினரால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 பாடசாலை மாணவிகளும் சிறுவர் இல்ல பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 61 அப்பாவித்தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே, குறித்த இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நீதி கோரி பிரித்தானியாவில் ஒன்று திரண்ட இளையோர் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக ஒன்றுகூடி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குறித்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.