SHARE

ஆதரவு கோரி ICPPG இன் இளையோர் அணி அறைகூவல்!!

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நாளும் இறுதி யுத்தத்தின் 12ஆம் ஆண்டு நினைவு தினமுமான 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் முன்பிரேரணை (Early Day Motion) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் முன்மொழியப்பட்டு, மேலும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்படி காலை நேர பாராளுமன்ற விவாதத்திற்கான இந்த முன்பிரேரணை (EDM 64) கொண்டுவரப்பட்டுள்ளது.

https://edm.parliament.uk/early-day-motion/58497

இந்நிலையில், குறித்த முன்பிரேரணையில் இலங்கையின் இராணுவத்தளபதியும் யுத்தக்குற்றவாளியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளையும் பிரித்தானியா தனது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் (Global Sanctions Regime) கீழ் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதிப்பாட்டை முன்னிறுத்தவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உள்ளநாட்டு போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னும் முழுமையான விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னும் விசாரணைசெய்யப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களில் கண்மூடித்தனமான குண்டுவீச்சு, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்கடத்தல் ஆகியனவும் அடங்கும்.

இந்நிலையில், யுத்தக்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பல்வேறு சர்வதேச தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில் மிகக் குறைந்த விசாரணைகள் மட்டுமே நடைபெற்றது மட்டுமல்லாது விசாரணைகளை எதிர்கொண்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலர் இன்றும் இலங்கையில் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கிறார்கள்.

ஆத்துடன் அண்மைக்கால இலங்கை அரசியலமைப்பின் சீர்திருத்தங்களால் நீதித்துறையின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகள் இடம்பெறாது என்ற நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை பேரவையில் இலங்கை பற்றிய முக்கிய குழுவின் தலைவராக பங்குவகித்திருக்கும் இங்கிலாந்து இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் ஏனைய ஐரோப்பிய பங்காளிகளும் தமது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையிலும் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது கரிசனையை வெளிப்படுத்தியதமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்பில் மாதம் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான 50 பக்க குற்றப்பத்திரிகை ஒன்றை ITJP என்ற மனித உரிமை அமைப்பு பிரித்தானிய அரிசின் வெளிவிவகார அமைச்சிடம் (FCDO) சமர்ப்பித்திருந்தது.

அந்த அடிப்படையில் தொடர்ந்து, 01 மே 2021 அன்று இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG), சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கைப் போர்க்குற்றவாளிகளை 06 யூலை 2020 அன்று நிறுவப்பட்ட பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான (GSR) தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய அரசிற்கு அவசர வேண்டுகோள் விடுத்ததுடன் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றுணைந்து அழுத்தம் வழங்குமாறும் கோரியிருந்தனர்.

அத்துடன் ICPPG இன் இளையோர் அணியாகிய இரண்டாம் தலைமுறையினர் இதனை நடைமுறைப்படுத்த ஆரதவு தேடி இணையவழி கையெழுந்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தனர்.

https://www.change.org/p/time-for-the-uk-to-sanction-sri-lanka-s-army-commander-war-criminal-shavendra-silva

அதேநேரம் அனைத்து பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்புகொண்டு தொடர் சந்திப்புக்களை நடாத்தி, பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிகளின் பலனாகவே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.

இனப்படுகொலையில் பலியான எமது தமிழ் உறவுகளை நினைவுகூரும் இந்த மாதத்தில் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகவும் இந்த வருடத்துக்கான இலக்காகவும் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவை தடை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ள இளையோர்கள் இந்த முன்பிரேரணையை வெற்றியளிக்க செய்ய அனைத்து மக்களையும் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு இந்த பிரேரணக்கு ஆதரவாக கையெழுத்து இடும்படி அழுத்தம் கொடுக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email