SHARE

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 688 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி யுள்ளார்கள் என்பதுடன் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனைவிட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், யாழில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 261 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களுக்குத் தடை விதித்தும் இருக்கின்றோம்.

தற்போது, பொலிஸார் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். அதாவது, ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றும் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளோம். அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனவே, அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளார்கள்.

எனவே, மட்டுப்படுத்தப்பட் வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

புதிய வீரியம்மிக்க வைரஸ் பரவல் நாட்டில் இருக்கின்றமையினால் சுகாதார நடைமுறைகளைப் பொதுமக்கள் இறுக்கமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்” என அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதி முழுமையாக நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதியில் 11 நோயாளர் படுக்கைகளும் , நான்கு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களும் உள்ள நிலையில் அவையனைத்தும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவுடன் நிரம்பியுள்ளன.

அத்துடன், குறித்த விடுதியில் தங்கி சிகிச்சைபெற்று வருவோர் 50 வயதுக்கும் கீழானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email