சென்னை: டில்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இங்கு வந்துள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்த நிலையில் தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன் டில்லியில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம், மனித உரிமை, தமிழர்களின் தற்போதைய தேவைகள், தற்போதைய சூழல் போன்றவற்றை அவர் விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அவர் சந்திக்கவிருக்கும் அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.