SHARE

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வாக்களிப்பதா அல்லது விலகுவதா என தீர்மானிப்பது இந்தியாவின் விடயம் ஆனால் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என கூறினார்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில், வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானங்களை குறிப்பாக 2009, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை ஆதரித்துள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை உயர் மட்டத்தில் கோரியுள்ளது.

இம்முறை இந்தியா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இலங்கைக்கு தனது ஆதரவை இந்தியா உறுதி அளித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

இருப்பினும் குறித்த கருத்து தொடர்பாக புதுடெல்லி உத்தியோகப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email