SHARE

இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்துட்டுள்ளது.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து, அவற்றில் ஒன்றையாவது நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென அம்பிகை ஆரம்பித்த உணவுதவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 15 நாட்களை அடைந்துள்ளது.

இந்நிலையில், அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும்  அவரை காப்பாற்றவேண்டுமெனவும் உலக அரங்கிலிருந்து பிரித்தானியாவுக்கு பல்வேறு அழுத்தங்கள் எழுந்துள்ளதுடன் பிரித்தானியாவில் நாளை மாபெரும் மக்கள் புரட்சி எழுச்சி பேரணியொன்றும் நடைபெறவுள்ளது.

இதனிடையே, வழமைபோல் இன்று  நடைபெறும் மெய்நிகர் (Zoom) வழி அம்பிகை ஆதரவு எழுச்சி நிகழ்வு மும்மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆரம்பமாகவுள்ளதுடன் திருமதி வாசுகி சுதாகர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மகளிரணிப் பொறுப்பாளர், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், ஸ்கொட்லாந்திலிருந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் திரு. சிவகுமார் மற்றும் அரசியல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய 14 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வு கனடாவிலிருந்து மணிக்குருக்கள், யாழ்ப்பாணத்திலிருந்து அமலமரித்தியாகிகள் சபையின் வின்சன் பற்றிக் மற்றும் மௌலவி சிபியான் ஆகியோரின் மும்மத ஆசீர்வாதங்களுடன் ஆரம்பமானது.

இதனையடுத்து உண்ணாவிரத களத்திலிருந்து  தர்ஷிகா ஸ்ரீ சிவகுமாரின் சிறப்புரை இடம்பெற்றதுடன் பிரித்தானிய தொழிற் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய Sam Tarry (Ilford south MP)    அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனுப்பி வைத்த காணொளி ஒளிபரப்பப்ட்டது. தொடர்ந்து மிதவாத ஜனநாயக்கட்சியின் தலைவரும் கிங்ஸ்டன் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகிய Sir Ed Davey யினால் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் கண்ணோட்டம்  அக்கட்சியின் உறுப்பினராகிய Dr.தேவநாதயினால் வழங்கப்பட்டது.

தாயகத்திலிருந்து தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும் கொள்கை பரப்புச் செயலாளருமான திரு. கந்தையா அருந்தவபாலன்,  விடுதலைப்போராட்டத்தின் உணர்வாளரான புதுக்கோட்டையிலிருந்து திரு.இரா.பாவாணன், கனடாவிலிருந்து மாவீரரின் தாயாரான திருமதி. கந்தசாமி,  பிரான்சிலிருந்து ஆழ்கடல் மறவர்கள் சார்பாக திரு.மணாளன், இந்திய கம்யுனிஸட் கட்சியின் மூத்த தலைவராகவும் எழுத்தாளருமான திரு. ஆ. மகேந்திரன்,  பிரித்தானியாவிலிருந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான திரு. மணிவண்ணன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. அதேவேளை ம.தி.மு.க பொதுச்செயலாளரான வை. கோபாலசாமி அவர்களால் வெளியிடப்பட்ட அம்பிகையின் போராட்டம் குறித்த அறிக்கையின் கண்ணோட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

தொகுப்பு- காண்டீபன் கிறிஸ்ரி நிலானி
உணவு தவிர்ப்பு போராட்ட குழு

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

Print Friendly, PDF & Email