SHARE

ஜெனீவாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு மோசமான அறிக்கையை வெளியிடுவார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவா அமர்வுக்கு முன்னதாக இந்த அறிக்கையின் நகல் வெளியிடப்படும் எனவும் அறிக்கையின் நகல் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அதன் பதில் உரிமைக்காக இலங்கை அரசுக்கு குறித்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ​​அறிக்கையின் நகலை இலங்கை பெற்றிருப்பதை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று நிலைவரப்படி இந்த அறிக்கைக்கு இலங்கை தனது பதிலை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று பாலசூரிய தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கை உள்ளது.

குறித்த அமர்வின் போது, ​​இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில்  கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் தோல்வி குறித்து மிச்சேல் பச்லெட் விமர்சனங்களை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email