SHARE

வாஷிங்டன், ஜூன் 16: முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர் பராக் ஒபாமா ஆணையிட்டுவிட்டார்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றவும், குடியுரிமை வழங்கலை முறைப்படுத்துவுமான சட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வருவதால் நிச்சயமற்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருதி இந்த ஆணையைப் பிறப்பிப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார்.  வரவேற்பு: லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து முறையான அனுமதி இல்லாமல் குடியேறியவர்களுடன் வந்த குழந்தைகள் அல்லது அவர்கள் அமெரிக்காவில் தங்கத் தொடங்கிய பிறகு பிறந்த குழந்தைகள் ஆகியோருடைய எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆணையைப் பிறப்பிப்பதாக ஒபாமா அறிவித்திருப்பதை லத்தீன் அமெரிக்க சமூகத் தலைவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.  குடியரசுக் கட்சி கண்டனம்: அதே சமயம் குடியரசுக் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். இதை அதிபர் வழங்கிய “”பொது மன்னிப்பு” என்றே அவர்கள் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை அதிபர் பறித்துவிட்டார் என்றும் சாடியுள்ளனர்.  வாக்குவங்கி அரசியல்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால் வாக்குகளைக் குறிவைத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  நிருபர்களிடம் அறிவிப்பு: தன்னுடைய முடிவை வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் மூத்த நிருபர்களிடம் தெரிவித்தார் அதிபர் ஒபாமா. அப்போது சில நிருபர்கள் தொடர்ந்து அவரிடம் விளக்கம் பெற குறுக்கிட்டுக் கொண்டே இருந்தனர்.  ஒபாமா விளக்கம்: படித்த, திறமையுள்ள, அமெரிக்கா மீது பற்றும் பாசமும் கொண்ட, அமெரிக்க நலனில் அக்கறை காட்டி உழைக்கிற இளைஞர்களை “”குடியுரிமை இல்லை” என்ற ஒரே காரணத்துகாக வெளியேற்றாமல் தொடர்ந்து தங்க தாற்காலிகப் பணி அனுமதி வழங்கப்படும்.  அமெரிக்க தேசிய நலனுக்கும் பொது நலனுக்கும் ஊறுவிளைவிக்காத, ஊறு விளைவிக்க நினைக்காத நல்ல இளைஞர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும்.  அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை நியாயமானது, திறமையானது நடுநிலையானது என்று அனைவரும் பாராட்டும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  பொது மன்னிப்பல்ல: இது பொது மன்னிப்பல்ல; இது நிரந்தரமும் அல்ல; இது சட்டவிரோதமாகக் குடியேறும் மக்களுக்குக் கேடயமும் அல்ல; இது அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்கான குறுக்கு வழியும் அல்ல. இது தாற்காலிக நிவாரணம்.  நம்முடைய பள்ளிக்கூடங்களில் படித்து, நம்முடைய வீட்டுக்கு அக்கம் பக்கத்து திடல்களில் விளையாடி, நம்முடைய குழந்தைகளுக்கு நண்பர்களாக உறவாடிய இளைஞர்களின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கை.  கொடிக்கு விசுவாசம்: அவர்கள் நம்முடைய கொடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தங்களுடைய இதயங்களில் அமெரிக்கர்களாகவே வாழ்கின்றனர். அவர்களுடைய சிந்தையில் அமெரிக்க நலன்தான் இருக்கிறது. அவர்களிடம் இல்லாதது – அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள் என்ற – அதிகாரப்பூர்வமான காகிதம்தான்.  அவர்களை அவர்களுடைய பெற்றோர்தான் இந்த பூமிக்குக் கொண்டுவந்தனர். சில வேளைகளில் கைக் குழந்தையாகக்கூட வந்திருப்பார்கள்.  முறையான குடியுரிமை இல்லாமல் இந்த நாட்டுக்குள் வருகிறோம் என்று தெரியாமலேயே வந்திருப்பார்கள்.  உணர்வது எப்போது? இந்த நாட்டில் வேலைக்கோ, ஓட்டுநர் உரிமத்துக்கோ, கல்லூரியில் படிக்க உதவித்தொகைக்கோ விண்ணப்பிக்கும்போதுதான் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படவில்லை என்ற உண்மை அவர்களால் உணரப்பட்டிருக்கும்.  நீங்கள் அவர்களாக இருந்தால்…: அவர்களுடைய நிலையில் நீங்கள் இருப்பதாக சற்றே கற்பனை செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் முறையாகவே செய்திருக்கிறீர்கள்; நன்றாகப் படித்தீர்கள், கடுமையாக உழைத்தீர்கள், உங்கள் வகுப்பிலேயே முதல் மாணவனாகக் கூட படிப்பில் சிறந்து விளங்கினீர்கள். திடீரென்று உங்களை, “”இந்த நாட்டவர் அல்ல” என்று கூறி நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள்?  உங்களுக்கு இதுவரை பழக்கமே இல்லாத நாட்டில், பேசவே முடியாத மொழியில், வசிக்க வேண்டிய, பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?  தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்களை – அமெரிக்காவில் வளர்ந்து உருவானவர்களை – நாடு கடத்துவதில் அர்த்தமே இல்லை. அவர்களுடைய பெற்றோர் செய்த தவறுக்காகவோ, முறையான குடியேற்றச் சட்டத்தை உருவாக்காத அரசியல்வாதிகளின் தவறுக்காகவோ அவர்களைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?  தெற்கிலே காவல்: எனவேதான் நாங்கள் நாட்டின் தென் பகுதியில் இப்போது காவலை பலப்படுத்தியிருக்கிறோம்; எல்லை கடந்து யாரும் வராதபடிக்கு அதிக ராணுவ வீரர்களைப் பணியில் நியமித்திருக்கிறோம். நில எல்லையை மட்டும் அல்லாது கடல் எல்லையையும் கண்காணிக்கிறோம். இதுவரை நம்முடைய வரலாற்றிலேயே இல்லாத வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்’ என்று விளக்கினார் பராக் ஒபாமா.

Print Friendly, PDF & Email