SHARE

நாடாளுமன்ற கன்னி அமர்வில் விக்னேஸ்வரன்

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அதேபோல மறைந்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் கீழ் யானைப் பலத்துடன் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி இன்று ஒரே ஒரு உறுப்பினர் என அளவுக்கு அதன் பலம் சுருங்கிவிட்டதாக தனதுரையில் கோடிட்டு காட்டிய நீதியரசர் விக்னேஸ்வரன் அதே பிழையை தற்போதைய பொதுஜன பெரமுன அரசும்  விட்டு அதே பாதையை தெரிவுசெய்யாது என்று நம்புவதாக கூறினார்.

“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977 ஆம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983 ஆம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது.  அந்த காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக  எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்றவகையிலும்  இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான  சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன். ” என்று கூறினார்.

“குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய  உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை  அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் ” என்று கூறினார்.

சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் நீதியரசர் தனது இந்த உரையில் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

“கௌரவ சபாநாயகர் அவர்களே, பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு  தெரியும். அதாவது, (கல கல பே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது. ” என்று கூறினார். 

தனது பேச்சை தமிழில் ஆரம்பித்த நீதியரசர் விக்னேஸ்வரன், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் அந்த தமிழ் மொழியில் தனது உரையை ஆரம்பிப்பதாகவும் கூறி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி சிங்கள மொழியில் தனது உரையை நிறைவுசெய்தார்.  

இதனிடையே முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட பாராளுமன்றாக இந்த 9 வது பாராளுமன்று விளங்குகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட பாராளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கௌரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ஆணை தொடர்பிலான நேர்மையான கலந்துரையாடல்களுக்கும் இடம் வழங்குகின்ற ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் உங்களை கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email