SHARE

கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை (20) நடைபெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் பழைமைவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் பற்கேற்காத மற்றும் இரண்டு ஆசனங்கள் வெறுமையாகவுள்ள நிலையிலேயே நாடாளுமன்றம் நாளை கூடுகின்றது.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை அடுத்து நாடாளுமன்றத்துக்கான சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தெரிவுகள் இடம்பெறவுள்ளன. 

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன சபை முதல்வராகவும், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளுங்கட்சிப் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பும் சபையில் வெளியிடப்படவுள்ளது.

இதுதவிர, எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சிப் பிரதம கொறடா ஆகியோரின் தெரிவுகளும், அவர்களது முக்கிய அறிவிப்புக்களும் இடம்பெறவுள்ளன.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் விசேட அறிவிப்பும் நாளை கூடுகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் விடுக்கப்படவுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நாடாளுமன்றம் கூடும்போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வெற்றிடமாகவே இருக்கும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் தமது நாடாளுமன்ற தேசியப் பட்டியில் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்னும் பெயரிடவில்லை. எனினும் புதிய நாடாளுமன்றத்தின் 223 உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணையகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை நாடாளுமன்றம் கூடும்போது இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஆசன ஒதுக்கீடான வெற்றிடமாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை வழங்கப்படும் போது, மாலை வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

இதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை சாதாரண முறையில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த காலங்களைப் போலல்லாது, இம்முறை ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வுகள் எவையும் முன்னெடுக்கப்பட மாட்டாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற முதலாவது அமர்வின்போது இராணுவ அணிவகுப்பு, குதிரைப்படை அணிவகுப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகள் என்பன நடத்தப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த அச்ச நிலை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நாடாளுமன்ற கூட்டத் தொடரை மிகவும் பாதுகாப்பாக நடத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, நாளை பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படமாட்டாது எனவும், புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை நாடாளுமன்றத்துக்கு அனுமதிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email